< Back
விமர்சனம்
தி ரோட் : சினிமா விமர்சனம்
விமர்சனம்

தி ரோட் : சினிமா விமர்சனம்

தினத்தந்தி
|
8 Oct 2023 10:46 AM IST
நடிகர்: சந்தோஷ் பிரதாப் நடிகை: திரிஷா  டைரக்ஷன்: அருண் வசீகரன் இசை: சாம் சி.எஸ் ஒளிப்பதிவு : கே.ஜி.வெங்கடேஷ்

திரிஷாவின் கணவரும், மகனும் காரில் வெளியூர் செல்கின்றனர். அப்போது விபத்தில் இருவரும் பலியாகிறார்கள். இதனால் அலறி துடிக்கிறார் திரிஷா. விபத்து நடந்த பகுதியை நேரில் சென்று பார்க்கும் அவருக்கு சந்தேகம் எழுகிறது. தனியாக விசாரிக்க தொடங்குகிறார். அப்போது அதே பகுதியில் செயற்கையாக நிறைய விபத்துகள் நடந்து பலர் இறந்து போய் இருப்பதை அறிந்து அதிர்கிறார்.

விபத்துகள் எதனால் நடக்கின்றன? விபத்துகளை ஏற்படுத்தும் மர்ம மனிதர் யார்? குற்றவாளிகளை திரிஷாவால் நெருங்க முடிந்ததா? என்பது மீதி கதை.

இல்லத்தரசி வேடத்தில் குன்றாத இளமையோடு இருக்கிறார் திரிஷா. தாய்மையை எண்ணி பூரிப்படைவது, கணவனை காதல் கண் கொண்டு பார்ப்பது, மகனிடம் பொய் சண்டை போடுவது, தனக்கு இழப்பை ஏற்படுத்தியவர்களை எதிர்க்க போராளியாக மாறுவது என கதாபாத்திரத்தை ரசித்து பண்ணியிருப்பதால் படத்தின் ஆரம்பத்திலேயே ரசிகர்களின் மனதில் ஒட்டிக்கொள்கிறார்.

கணவனின் இறப்புக்கு நியாயம் தேடி புரட்சிப் பெண்ணாக பொங்கி எழும் காட்சிகள் அனைத்துமே அதிர்வு ரகம்.

கல்லூரி பேராசிரியராக வரும் ஷபீர் கல்லரக்கல் வழக்கம்போல் தன்னுடைய பங்களிப்பில் சத்தமில்லாமல் சதம் அடித்திருக்கிறார். அப்பாவுக்கு அடங்கிப்போகும் மகனாக, கண்ணியமிக்க பேராசிரியராக நடித்து அசத்தியிருக்கிறார். அவரது இன்னொரு முகம் எதிர்பாராதது. போலீசாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் நிறைவான நடிப்பை வழங்கி உள்ளார்.

சந்தோஷ் பிரதாப், வேல ராமமூர்த்தி, மியா ஜார்ஜ், செம்மலர் அன்னம், திருநங்கை நேகா என அனைவரும் கதாபாத்திரத்திமாகவே மாறி பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்.

திரிஷாவுக்கு அடுத்து படத்தில் தனி ராஜங்கம் நடத்துபவர் இசையமப்பாளர் சாம் சி.எஸ். பல இடங்களில் இசை மூலம் கதைச் சொல்ல முடியும் என்பதை உணர வைத்துள்ளார்.

நள்ளிரவு நெடுஞ்சாலை பயணம், மலை முகடுகள், அழகு கொஞ்சும் கிராமம் என அனைத்து இடங்களிலும் தன்னுடைய கேமரா வித்தையை காண்பித்து திரையோடு ரசிகர்களை கட்டிப்போடுகிறார் ஒளிப்பதிவாளர் கே.ஜி.வெங்கடேஷ்.

சாலை மார்க்க பயணத்தில் இருக்கும் சில பயங்கரங்களை விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் படமாக்கி கவனம் பெறுகிறார் இயக்குனர் அருண் வசீகரன்.

ஒரே ரூட்டில் பயணிக்கும் கதையில் சில, பல கிளை கதைகள் இணைவது வேகத்தடை.

மேலும் செய்திகள்