தலைக்கூத்தல்: சினிமா விமர்சனம்
|தனியார் நிறுவன செக்யூரிட்டி சமுத்திரக்கனி. அவருடைய மனைவி வசுந்தரா. இந்த தம்பதிக்கு ஒரு மகள். இவர்களுடன் மரண படுக்கையில் சமுத்திரக்கனியின் வயதான அப்பா. அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள்.
சமுத்திரக்கனியின் தந்தை எல்லோருக்கும் பாரமாக தோன்றுகிறார். அந்த கிராமத்தில் வயதானவர்களை தலைக்கூத்தல் முறையில் கொலை செய்கிறார்கள். அதுபோல் சமுத்திரகனியின் தந்தையையும் கொல்ல மனைவி வசுந்தரா மற்றும் அவருடைய குடும்பத்தினர் திட்டமிடுகிறார்கள்.
ஆனால் பாசத் தந்தையை அநியாயமாக கொலை செய்வதற்கு சம்மதிக்காமல் துடிக்கிறார் சமுத்திரக்கனி. மனைவிக்கு தெரியாமல் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து தந்தைக்காக செலவு செய்கிறார். சமுத்திரக்கனிக்கு கடன் கொடுத்தவர் வீட்டை விற்று பணத்தை எடுத்துக்கொள்ள திட்டமிடுகிறார்.
ஏற்கனவே அப்பாவை காரணம் காட்டி சமுத்திரக்கனியிடம் வம்பு இழுத்த வசுந்தரா கடன் வாங்கிய விஷயம் தெரிந்ததும் மேலும் சண்டை போடுகிறார். சமுத்திரக்கனியால் மனைவியை சமாதானப்படுத்தி குடும்பம் நடத்த முடிந்ததா? உயிர் ஊசலாடும் சமுத்திரக்கனியின் அப்பாவின் உயிர் தப்பித்ததா? என்பது மீதி கதை.
சமுத்திரக்கனிக்கு வாழ்நாளுக்கும் பெருமைப்படக்கூடிய வேடம். அதை அவரும் உணர்ந்து கதாபாத்திரமாக மாறி தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்று வியப்பில் ஆழ்த்துகிறார். தந்தைக்கு பாசமான மகனாக, மனைவி அவமானப்படுத்துவதை தாங்கும் அமைதியான கணவனாக, மகளை அரவணைக்கும் அன்பான தந்தையாக வாழ்ந்து விருதுக்குரிய நடிப்பை கொடுத்து இருக்கிறார். வசுந்தரா யதார்த்தத்தை கண்முன் நிறுத்துகிறார். கணவனை அவசரப்பட்டு அடிப்பதும் பிறகு கையை பிசைந்து நிற்பதும் கணவனின் அடிக்கு பயந்து ஓடுவதும் ரகளை.
பிளாஷ்பேக்கில் வரும் கதிர் கெட்டப், ஹேர் ஸ்டைல், நடிப்பு என எல்லா விதத்திலும் ஆச்சரியப்படுத்துகிறார். அவருடைய காதலியாக வரும் கத்தா நந்தி சிறிது நேரமே வந்தாலும் மனதில் ஒட்டிக் கொள்கிறார். ஆடுகளம் முருகதாஸ், வையாபுரி ஆகியோரின் வேடங்கள் கவனிக்க வைக்கிறது. படம் முழுக்க படுத்துக்கொண்டே மனதை உருக்குகிறார் கலைச் செல்வன், கதிர் காதலிப்பதை தவிர என்ன செய்கிறார். தாம்பத்ய காட்சி உட்பட சில இடங்கள் கதையில் ஒட்டாமல் நிற்கிறது. காட்சிகளின் நீளத்தையும் குறைத்து இருக்கலாம்.
மனதை வருடும் மென்மையான இசையை கொடுத்திருக்கிறார் இசை அமைப்பாளர் கண்ணன் நாராயணன். கிராமத்து அழகை மிக அழகாக படம் பிடித்திருக்கிறார் மார்டின் டான் ராஜ். அடிதடி, பஞ்ச் வசனங்கள் இல்லாமல் சில கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து மனதை தொடும் அழுத்தமான படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் ஜெய்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.