சித்தா: சினிமா விமர்சனம்
|செல்போனுக்கு பிள்ளைகள் அடிமையாவது, பிள்ளைகள் விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்கும் பெற்றோர்களுக்கான படம்.
பழனியில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சித்தார்த் நகராட்சி தூய்மை பணி அதிகாரியாக வேலை பார்க்கிறார். அவருடைய காதலி நிமிஷா சஜயன் கடைநிலை தூய்மை பணியாளராக வேலை பார்க்கிறார்.
சித்தார்த்தின் அண்ணன் மகளுடன் படிக்கும் சக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். பழி சித்தார்த் மீது விழுகிறது. போலீசிலும் பிடித்து கொடுக்கின்றனர். பிறகு அவர் நிரபராதி என்று தெரிய வருகிறது.
இதுபோல் சித்தார்த்தின் அண்ணன் மகளும் கடத்தப்படுகிறார். கடத்தியவர் யார்? குழந்தை மீட்கப்பட்டதா? என்பது மீதி கதை.
ஹீரோ இமேஜ் வீழ்ந்து விடாதபடிக்கு தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார் சித்தார்த். காதலியிடம் காதலை சொல்ல தயங்குவது, பாலியல் குற்ற பழி விழுந்ததும் வெட்கித் தலை குனிவது, அண்ணன் மகளிடம் பாசத்தைக் கொட்டுவது என மொத்த சுமையையும் தோளில் சுமந்து படத்துக்கு பலம் சேர்த்துள்ளார்.
சித்தார்த்தால் அடுத்த வீட்டு இளைஞன் தோற்றத்தில் இந்தளவுக்கு இறங்கி நடிக்க முடியுமா? என ஆச்சர்யப்படுத்தியும் இருக்கிறார்.
நிமிஷா சஜயன் நடிப்பு ராட்சசியாக மிரட்டியிருக்கிறார். நாயகனுக்கு ஆதரவாக தோள்கொடுப்பது, கழிவறையை சுத்தம் செய்யாதவரை மிரட்டுவது என நிமிஷங்களை வீணடிக்காமல் சம்பவம் செய்திருக்கிறார்.
அண்ணியாக வரும் அஞ்சலி நாயர், அண்ணன் மகளாக வரும் சகஸ்ரா ஸ்ரீ, சக மாணவியாக வரும் ஆசியா, இன்ஸ்பெக்டராக வரும் ஜான்சி, சப் இன்ஸ்பெக்டராக வரும் பாலாஜி என அனைவரும் சிறப்பாக நடித்து கதாபாத்திரத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
திபு நிணன் தாமஸ் இசையில் பாடல்கள் அற்புதம். கதையை தொந்தரவு செய்யாத விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் அடடா ரகம்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம், பழனியின் மொத்த அழகையும் தன்னுடைய கேமராவில் கொண்டுவந்த விதம் சிறப்பு.
செல்போனுக்கு பிள்ளைகள் அடிமையாவது, பிள்ளைகள் விஷயத்தில் அஜாக்கிரதையாக இருப்பது என குழந்தை வளர்ப்பில் பெற்றோர் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை இயக்குனர் அருண்குமார் மெல்லிய கனம் சேர்த்து சொல்லியுள்ளார்.
படத்தின் ஆரம்பத்தில் இருக்கும் பதட்டம் முடியும் வரை தொடர்வது படத்தின் வெற்றி.
குழந்தையை வில்லன் தவறாக பயன்படுத்தும் நேரடி காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.