< Back
விமர்சனம்
செம்பி : சினிமா விமர்சனம்
விமர்சனம்

செம்பி : சினிமா விமர்சனம்

தினத்தந்தி
|
31 Dec 2022 8:59 AM IST
நடிகர்: அஸ்வின்குமார் நடிகை: கோவை சரளா, நிலா  டைரக்ஷன்: பிரபு சாலமன் இசை: நிவாஸ் கே.பிரசன்னா ஒளிப்பதிவு : ஜீவன்

கொடைக்கானல் மலை கிராமத்தை சேர்ந்தவர் கோவை சரளா. அவருடைய பேத்தி நிலா. காடுகளில் கிடைக்கும் பொருட்களை விற்று வாழ்க்கையை நகர்த்துகின்றனர். டாக்டராகும் கனவோடு இருக்கும் சிறுமி நிலாவின் வாழ்க்கை அதிகார, பண திமிர் பிடித்த மூன்று இளைஞர்களால் சீரழிக்கப்படுகிறது. பேத்திக்கு நடந்த கொடுமையை கண்டு பொங்கி எழுந்து சட்ட போராட்டத்துக்கு தயாராகிறார் கோவை சரளா. அவருக்கு நீதி கிடைத்ததா? என்பது மீதி கதை.

கோவை சரளாவுக்கு படத்தின் முதுக்கெலும்பு கதாபாத்திரம். காட்சிக்கு காட்சி உடல் மொழியாலும், தோற்றாத்தாலும் ஆச்சரியப்பட வைக்கிறார். பேத்திக்கு நடந்த கொடுமையை டாக்டர் சொன்னதும் முகத்தில் வெளிப்படுத்தும் அந்த உணர்வுகள் அபாரம்.

சிறுமி நிலாவும் கதாபாத்திரத்தில் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார்.

அஸ்வின்குமார் இருந்த இடத்தில் இருந்தே சட்ட போராட்டத்தை லாவகமாக கையாளும் விதம் அவரது கதாபாத்திரத்தின் மீது ஈர்ப்பு கொள்ள வைக்கிறது.

பஸ் அதிபராக தம்பிராமையா, சுண்டு விரலால் விசிலடிக்கும் தோரணையாகட்டும், பயணிகளை டீல் பண்ணும் விதமாகட்டும் அனைத்து இடங்களில் சிரிக்க வைக்கிறார். பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத், கு.ஞானசம்பந்தம் என அனைவரும் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஜீவன் கதைக்களமான கொடைக்கானலுக்கே அழைத்து சென்று பனி மூட்டம், மேகங்கள், வனங்கள் என இயற்கையை தன் கேமரா மூலம் படையல் போட்டு அசத்தியிருக்கிறார். சில இடங்களில் மேகங்கள் நம்மீது தவழ்ந்து செல்வதுபோல் சிலிர்ப்புட்டும் விதத்தில் படமாக்கியிருப்பது அற்புதம்.

இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா பல இடங்களில் வாத்தியங்களால் ஆளுமை செலுத்துகிறார்.

ஏழையாக இருந்தாலும் சரி, செல்வந்தனாக இருந்தாலும் சரி அன்பு பொதுவானது. அதில் மிச்சம் வைக்காதீர்கள் என்று படத்தின் மாந்தர்கள் அனைவரையும் பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு அழகாக கதை சொல்லியிருக்கிறார் பிரபு சாலமன்.

விழிப்புணர்வை உண்டாக்கும் விதமாக போக்சோ சட்டம், மழலையருக்கான அபெக்ஸ் நீதிமன்றம் போன்ற விளக்கங்கள் கவனம் பெறுகின்றன.

போராடினால் சாமானியர்களும் ஜெயிக்கலாம் என்ற படத்தின் கரு உத்வேகம் தருகிறது. இரண்டாம் பாதி சினிமாத்தனமாக இருந்தாலும் ரசிகர்களின் ரசனையை திருப்திப்படுத்தியதில் வென்று இருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன்.

மேலும் செய்திகள்