< Back
விமர்சனம்
விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதை ராக்கெட்ரி: சினிமா விமர்சனம்
விமர்சனம்

விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதை "ராக்கெட்ரி": சினிமா விமர்சனம்

தினத்தந்தி
|
4 July 2022 9:36 PM IST
நடிகர்: மாதவன் நடிகை: சிம்ரன்  டைரக்ஷன்: மாதவன் இசை: சாம் சிஎஸ் ஒளிப்பதிவு : ஷிர்ஷா

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாக கொண்ட கதை.

நம்பி நாராயணன் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகளை செய்து உலக விண்வெளி சந்தையில், இந்தியாவின் மதிப்பை உயர செய்தவர். அவர் மீது பாகிஸ்தானுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய ரகசியங்களை விற்றதாக கூறி, சி.பி.ஐ. கைது செய்கிறது.

விசாரணை என்ற பெயரில் சி.பி.ஐ. அதிகாரிகள் சித்ரவதை செய்கிறார்கள். மூன்றாந்தர குற்றவாளிகளை நடத்துவது போல், அடித்து உதைத்து அவமரியாதை செய்கிறார்கள். அவரைப்போல் அவரது குடும்பத்தினரும் போலீஸ் பிடியில் சிக்கி தவிக்கிறார்கள். அவருடைய மனைவி அதிர்ச்சியில் சித்தப்பிரம்மைக்குள்ளாகிறார். உறவினர்கள், நண்பர்களால் குடும்பம் உதாசினப்படுத்தப்படுகிறது.

நம்பி நாராயணன் எப்படி தன்னை நிரபராதி என்று நிரூபிக்கிறார் என்பது உணர்ச்சிகரமான பின்பகுதி கதை.

நம்பி நாராயணனாக மாதவன் வாழ்ந்திருக்கிறார். நண்பர்களுடன் உற்சாகமாக சந்தோசங்களை பகிர்ந்து கொள்வது, கடமை உணர்ச்சியின் உச்சமாக சக விஞ்ஞானியின் மகன் மரணத்தை மறைப்பது, சி.பி.ஐ. அதிகாரிகளால் அவமரியாதை செய்யப்படும்போது, ''நான் ஒரு விஞ்ஞானி. என்னை ஏன் அடிக்கிறீர்கள்?'' என்று அப்பாவித்தனமாக கேட்பது என படம் முழுக்க பார்வையாளர்களை அவருடைய கதாபாத்திரத்துடன் ஒன்ற வைத்து விடுகிறார்.

நம்பி நாராயணனின் மனைவியாக சிம்ரன். சில வருடங்களுக்கு முன் ரசிகர்கள் மனதில் கனவுக்கன்னியாக வாழ்ந்த சிம்ரனா இது? என்று வியக்க வைக்கிறார். கவர்ச்சி நாயகி கனமான வேடம் சுமந்து நெஞ்சை கனக்க வைக்கிறார்.

படத்தில் சூர்யா எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. நம்பி நாராயணனுக்கு நேர்ந்த அனுபவங்களை கேட்டு கலங்கும் இடத்தில், படம் பார்ப்பவர்களையும் கலங்க வைத்து விடுகிறார். ரவி ராகவேந்தர், கார்த்திக் குமார் ஆகியோருடன் நிஜ நம்பி நாராயணனும் நடித்து இருக்கிறார்.

மாதவனே இயக்கியிருக்கிறார். படத்தின் முதல் பாதியில், வேக குறைவு. ராக்கெட் பற்றிய தொழில்நுட்ப வார்த்தைகள் அடங்கிய வசனங்களை குறைத்து இருக்கலாம். இரண்டாம் பாதி விறுவிறுப்பாக இருக்கிறது. டைரக்டராகவும் மாதவன் வெற்றி பெற்று இருக்கிறார்.

மேலும் செய்திகள்