சமரா - சினிமா விமர்சனம்
|இமயமலையில் இரண்டு பேர் கொல்லப்படுகிறார்கள். அந்த வழக்கை விசாரிக்க வருகிறார் காவல்துறை அதிகாரி ரகுமான். பிறகு கதை சரித்திர காலத்துக்கு நகர்கிறது.
சர்வாதிகாரி ஹிட்லர் எதிரிகளை தாக்குவதற்கு கொடிய வைரஸை உருவாக்குகிறார். அதன் வீரியம் பயங்கரமாக இருப்பதால் போரில் பயன்படுத்துவதை தவிர்த்து அழித்து விடுகிறார்.
அந்த கொடிய கிருமியை ஒரு பயங்கரவாத கும்பல் மீண்டும் உற்பத்தி செய்து இந்தியா மீது பயோ வார் எனப்படும் உயிரியில் போர் நடத்த முயற்சிக்கிறது. அதை ரகுமான் தடுத்தாரா? பயங்கரவாத செயலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது மீதி கதை.
காவல் துறை அதிகாரி வேடத்துக்கு ரகுமான் பொருத்தமாக இருப்பதோடு தன்னுடைய அனுபவ நடிப்பால் கேரக்டருக்கு பெருமை சேர்த்துள்ளார். பரத் இரண்டாம் பாதியில் வந்தாலும் முதல் பாகத்துக்கும் சேர்த்து தன் பங்களிப்பை வழங்கியிருப்பது சிறப்பு.
இவ்விருவருக்கும் அடுத்து ரசிகர்களை வியக்க வைக்குமளவுக்கு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருப்பவர் பினோஜ் வில்லியா. உடல் முழுவதும் வெந்த நிலையில் பிரத்யேக மேக்கப்புடன் நடித்திருக்கும் பினோஜ் படம் முழுவதும் கவனிக்க வைக்கிறார். மனைவி பிரிந்த ஏக்கம், மகள் மீது பாசம் என நவரசத்தை கொட்டி நடித்திருப்பது அருமை.
தினேஷ் லம்பா, சஞ்சனா திபு, ராகுல் மாதவ், டேரிஸ் ஜினோய், கோவிந்த் கிருஷ்ணா, டினிஜ், விவியா சாந்த், வீர் ஆர்யன், சோனாலி சுதன், டாம் ஸ்காட், பிஷல் பிரசன்னா என பிற வேடங்களில் வருபவர்களும் மிகையில்லாத நடிப்பை வழங்கியிருப்பது சிறப்பு.
இமயமலை அழகை அற்புதமாக படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த். ஓநாய் கூட்டத்தை துரத்திப்போகும் காட்சியாகட்டும், பனிபடர்ந்த மலையாகட்டும் அனைத்திலும் ஒளிப்பதிவாளரின் திறமை பளிச்.
தீபக் வாரியரின் இசையில் பாடல்களும், கோபி சுந்தரின் பின்னணி இசையும் படத்துக்கு பலத்தைச் சேர்க்கிறது.
ஆக்ஷன் கதையில் பாசம், சென்டிமெண்ட் என கமர்ஷியல் அம்சங்களை சேர்த்து ரசிக்கும்படியாகவும், நேர்த்தியாகவும் சொல்லியுள்ளார் இயக்குனர் சார்லஸ் ஜோசப்.
முதல் பாதியில் துண்டு துண்டாக வரும் காட்சிகள் பலகீனம்.