< Back
விமர்சனம்
போர் தொழில்: சினிமா விமர்சனம்
விமர்சனம்

போர் தொழில்: சினிமா விமர்சனம்

தினத்தந்தி
|
10 Jun 2023 10:07 AM IST
நடிகர்: சரத்குமார், அசோக் செல்வன் நடிகை: நிகிலா விமல்  டைரக்ஷன்: விக்னேஷ் ராஜா இசை: ஜேக்ஸ் பிஜாய் ஒளிப்பதிவு : கலைச்செல்வன் சிவாஜி

சி.பி.சி.ஐ.டி போலீஸ் சூப்பிரண்டு சரத்குமாரிடம் போலீஸ் அதிகாரி வேலைக்கு தேர்வான பயந்த சுபாவம் உள்ள அசோக் செல்வன் பயிற்சிக்கு வருகிறார். அவரை வேண்டா வெறுப்பாக சேர்த்துக் கொள்கிறார். அப்போது திருச்சியில் பெண்ணின் கை கால்களை கட்டி தடயம் இல்லாமல் கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்கும் பணியை சரத்குமாரிடம் ஒப்படைக்கின்றனர்.

அசோக் செல்வன் மற்றும் போலீஸ் துறையை சேர்ந்த நிகிலா விமல் ஆகியோரை அழைத்துக்கொண்டு திருச்சி செல்கிறார் சரத்குமார். விசாரணைக்கு சென்ற இடத்தில் பிணத்தை பார்த்து வாந்தி எடுக்கும் அசோக் செல்வன் செயல் எரிச்சல் தர அவரை ஊருக்கு திருப்பி அனுப்புவதில் குறியாக இருக்கிறார் சரத்குமார்.

இந்த நிலையில் ஏற்கனவே நடந்த கொலை பாணியில் இன்னொரு இளம் பெண் கொலை தொடர்ந்து மற்றொரு கொலை என்று கொலை பட்டியல் நீள்கிறது. இதனால் விசாரணையை தீவிரப்படுத்துகின்றனர்.

அப்போது கொலைக்கான மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன. கொலையாளி யார்? கொலைக்கான நோக்கம் என்ன? கொலையாளியை இருவரும் இணைந்து கண்டுபிடித்தார்களா? போன்ற பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை…

கண்டிப்பும் திறமையும் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு கதாபாத்திரத்தில் வரும் சரத்குமார் அசாத்தியமான நடிப்பால் அசர வைக்கிறார். தனக்கு கீழே பணி செய்பவர்களிடம் சிடுசிடுவென இருப்பது, கொலையை பார்த்தே கொலைகாரன் மனநிலையை துல்லியமாக அறிவது என சரத்குமாரின் கெத்தான துப்பறியும் நடிப்பை ரசிக்க முடிகிறது.

பயந்தாலும் அதை வெளியில் காட்டாத போலீஸ் அதிகாரியாக வரும் அசோக் செல்வன ஆரவாரம் இல்லாத அமைதியான நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். படித்ததை வைத்தே அவர் துப்பறியும் காட்சிகள் சுவாரஸ்யம்.

நிகிலா விமல், பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர், நிழல்கள் ரவி ஆகியோர் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வழங்கி உள்ளனர்.

பிற்பகுதி கதையில் சில தொய்வுகள் இருந்தாலும் திரைக்கதையின் வேகம் மறக்கடிக்க செய்கிறது.

திரில்லர் கதைக்குரிய இசையை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய். காட்சிகளை அழகாக படம்பிடித்துள்ளது கலைச்செல்வன் சிவாஜி கேமரா.

சைக்கோ கொலைகள் படத்தை காதல், சண்டை எதுவும் இல்லாமல் கிளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸ் திருப்பங்களுடன் விறுவிறுப்பு குறையாமல் நகர்த்தி திறமையான இயக்குனராக கவனம் பெற்றுள்ளார் விக்னேஷ் ராஜா. கிரைம் திரில்லர் கதை விரும்பிகளுக்கு நல்ல விருந்து.

மேலும் செய்திகள்