பத்து தல : சினிமா விமர்சனம்
|குவாரி அதிபரும் தாதாவுமான சிம்பு ரவுடிசத்தால் அரசியலையும், அதிகார வர்க்கத்தையும் ஆட்டிப்படைக்கிறார்.
சிம்புவுடன் துணை முதல்வர் கவுதம் மேனன் மோதுகிறார். இந்த நிலையில் முதல்-அமைச்சர் சந்தோஷ் பிரதாப் கடத்தப்படுகிறார். அவரை கடத்தியது சிம்புதான் என்று சந்தேகம் எழுகிறது.
சிம்புவை பிடிப்பதற்கு அண்டர் கவர் போலீஸ் அதிகாரியாக கவுதம் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டு சிம்புவின் அடியாளாக அவரது கூட்டத்துக்குள் அனுப்பப்படுகிறார்.
முதல்-அமைச்சர் எதற்காக கடத்தப்பட்டார். அவரது நிலைமை என்ன ஆனது, கவுதம் கார்த்திக்கால் சிம்புவை கைது செய்ய முடிந்ததா? என்பது மீதி கதை...
தாதா, பாசமிகு அண்ணன், மக்களை காக்கும் ரட்சகன், துரோகிகளை பந்தாடும் ராட்சசன் என படம் முழுக்க ருத்ரதாண்டவம் ஆடி இருக்கிறார் சிம்பு.
சாம்பல் நிற தாடி, கருப்பு நிற காஸ்டியூம், பார்வையில் நிதானம் என்று கெட்டப்பில் அசத்தி நடிப்புக்கு ஸ்கோப் உள்ள இடங்களில் அபாரமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
தங்கை, தங்கையின் மகளிடமும் காட்டும் அன்பு, கூட்டாளியிடம் பரிவு, எதிரிகளைப் பந்தாடும் ஆவேசம் என்று எல்லா இடங்களிலும் சிம்புவிடம் தேர்ந்த நடிப்பை பார்க்க முடிகிறது. மக்களின் அன்பில் மூழ்கி கண் கலங்கும் போது ரசிகர்களையும் கலங்க வைத்து விடுகிறார்.
அண்டர் கவர் போலீஸ் ஆபீசர் கேரக்டருக்கு கவுதம் கார்த்திக் கச்சிதம். காரியத்தில் கண்ணாக இருந்து கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். அதிரடியிலும் அதகளம் செய்துள்ளார்.
நேர்மையான தாசில்தாராக வரும் பிரியா பவானி சங்கர் இயல்பான நடிப்பின் மூலம் மனதில் நிற்கிறார்.
கவுதம் மேனன் வில்லத்தனமாக வந்தாலும் ஸ்டைலிஷ் நடிப்பால் ரசிக்க வைக்கிறார்.
ரெடின் கிங்ஸ்லி, டீஜே அருணாசலம், அனுசித்தாரா, கலையரசன், ஜோமல்லூரி, மனுஷ்யபுத்திரன், கஜராஜ், சந்தோஷ் பிரதாப் என அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சிம்புவை பிடிக்கும் போலீஸ் கோர்ட்டில் ஒப்படைக்கும் முன்பு சாட்சி இல்லை என்று அவர்களாகவே விடுவிப்பது அபத்தம்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் பரவசம். பழமையும், புதுமையும் கலந்து கொடுத்திருக்கும் பின்னணி இசை பிரமிப்பை தருகிறது.
ஒளிப்பதிவாளர் பரூக் பாஷாவின் கேமரா ஹாலிவுட்டுக்கு நிகராக கடுமையாக உழைத்திருக்கிறது.
காதல் படங்களாக எடுத்த ஒபிலி என்.கிருஷ்ணா தன்னால் பிரமிக்க வைக்கும் ஆக்ஷன் படத்தையும் எடுக்க முடியும் என்று பிரமாண்டமான படத்தை கொடுத்திருக்கிறார்.