பர்ஹானா: சினிமா விமர்சனம்
|நடுத்தர இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தனது தந்தை கிட்டி, கணவர் ஜித்தன் ரமேஷ் மற்றும் குழந்தைகளுடன் வசிக்கிறார். சிறிய செருப்பு கடை வருமானம் போதுமானதாக இல்லாமல் குடும்பம் தத்தளிக்கிறது. குழந்தைக்கு பள்ளி கட்டணமும் செலுத்த முடியவில்லை.
இதனால் கால் சென்டர் ஒன்றில் பணியில் சேர்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதில் பணம் சேர்ந்து பொருளாதார நிலைமை உயர்கிறது. இந்த நிலையில் தனது குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவுக்கு கூடுதல் பணம் தேவைப்படுகிறது. இதனால் அதிக ஊக்கத்தொகை கிடைக்கும் இன்னொரு பிரிவுக்கு மாற்றல் வாங்கி செல்கிறார்.
அங்கு அதிர்ச்சி சம்பவங்கள் நடந்து ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. அதில் இருந்து மீண்டாரா? என்பது மீதை கதை,
ஐஸ்வர்யா ராஜேசுக்கு முக்கிய படம். முஸ்லிம் பெண் பர்ஹானா கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்தி இருக்கிறார். பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் குடும்பத்தலைவியாய் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் என்பதை மறந்து இஸ்லாமிய பெண்ணாகவே அவரை பார்க்க முடிவது கதாபாத்திரத்துக்கு கிடைத்துள்ள வெற்றி.
கால் சென்டரில் ஆண்கள் ஆபாசமாக பேசுவதை கேட்டு நிலை குலைவது. கண்ணியமாக பேசும் ஒருவரின் குரலில் மனதை இழப்பது, பிறகு அதில் இருந்து மீள போராடுவது என்று கதாபாத்திரத்தை காட்சிக்கு காட்சி மெருகேற்றி இருக்கிறார்.
ஜித்தன் ரமேஷ் மவுனமாக உணர்வுகளை கடத்தும் சிறந்த கணவராக வந்து நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார். செல்வராகவன் இரு முகம் காட்டி அதிர வைக்கிறார். ஐஸ்வர்யா தத்தா கவர்ச்சியில் தாராளம், முடிவு பரிதாபம். கிட்டி, அனுமோல் கதாபாத்திரங்களும் நிறைவு. செல்வராகவன், ஐஸ்வர்யா ராஜேஷ் போன் உரையாடல் மனதை வருடும் ரகம்.
ஐஸ்வர்யா ராஜேஷ் முகம் தெரியாத ஒருவரை வீட்டுக்கு தெரியாமல் சந்திக்க செல்வது நெருடல். கோகுல் பினோயின் கேமரா குறுகலான தெருக்கள், சிறிய வீட்டுக்குள் நடக்கும் வாழ்வியல் நிகழ்வுகள் அனைத்தையும் அற்புதமாக படம் பிடித்து உள்ளது.
ஜஸ்டின் பிரபாகர் பின்னணி இசை பிற்பகுதி கதையை வேகப்படுத்தி உள்ளது.
வறுமையை போக்க வேலைக்கு செல்லும் பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அழுத்தமான திரைக்கதையில் திகில் மர்மங்களுடன் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி ரசிக்கும்படி கொடுத்து இருக்கிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.