< Back
விமர்சனம்
நூடுல்ஸ் - சினிமா விமர்சனம்
விமர்சனம்

நூடுல்ஸ் - சினிமா விமர்சனம்

தினத்தந்தி
|
9 Sept 2023 2:49 PM IST
நடிகர்: ஹரிஷ் உத்தமன் நடிகை: ஷீலா ராஜ்குமார்  டைரக்ஷன்: மதன் தட்சிணாமூர்த்தி இசை: ராபர்ட் சற்குணம் ஒளிப்பதிவு : விநோத்ராஜ்

ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனுடன் ஒரு பிரச்சினையில் மோதல் வருகிறது.

அதோடு தனது மகள் கையில் இருந்த செல்போனை திருட முயன்றவனை ஷீலா ராஜ்குமார் பிடித்து இழுக்க அவன் கீழே விழுந்து பேச்சு மூச்சின்றி கிடக்கிறான். அவன் இறந்து போனதாக பதறி உடலை வீட்டின் ஒரு அறையில் மறைத்து வைக்கிறார்கள்.

அப்போது ஹரிஷ் உத்தமனை ஆட்டோ டிரைவரை தாக்கிய வழக்கில் கைது செய்ய போலீஸ் அதிகாரி வீட்டுக்குள் வருகிறார். நீண்ட காலம் பேசாமல் இருக்கும் ஷீலா ராஜ்குமாரின் பெற்றோரும் வருகிறார்கள். இந்த இக்கட்டில் தம்பதிகள் சிக்கி தவிப்பதும் அதில் இருந்து மீண்டார்களா? என்பதும் கதை

பல படங்களில் வில்லனாக வந்த ஹரிஷ் உத்தமனுக்கு இதில் கதாநாயகன் வேடம். மனைவியை பிரச்சினையில் இருந்து காப்பாற்ற துடிக்கும் அன்பான கணவன், பாசமிக்க அப்பா என பல பரிமாணங்களில் பண்பட்ட நடிப்பை வழங்கி கவனிக்க வைக்கிறார்.

குடும்ப தலைவி வேடத்துக்கு ஷீலா ராஜ்குமார் கச்சிதமாக இருக்கிறார். ஆரம்பத்தில் காவல் அதிகாரியிடம் சட்டம் பேசுவது, பிறகு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க ஓடி ஒளிவது என தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் மதன் கண்களை உருட்டி எதிரில் இருப்பவருக்கு உதறல் வரவழைத்து விடுகிறார்.

வக்கீலாக வரும் வசந்த் மாரிமுத்து இவ்வளவு நாள் எங்கிருந்தார் என்று கேட்கும் அளவுக்கு தன்னுடைய கேரக்டரை பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

சக குடியிருப்புவாசிகளாக வரும் திருநாவுக்கரசு, ஜெயந்தி, மஹினா, போலீசாக வரும் ஷோபன் மில்லர், குழந்தை நட்சத்திரம் ஆழியா, சிறுவர்கள் என அனைவரும் தங்களது பங்கை சிறப்பாக செய்து படத்தை ரசிக்க வைக்கிறார்கள்.

ராபர்ட் சற்குணம் அற்புதமான பின்னணி இசை கொடுத்திருக்கிறார்.

பெரும்பகுதி காட்சிகள் வீட்டுக்குள்ளேயே நகர்வது நெருடல்.

சிறிய வீடு, நான்கைந்து இருக்கைகள், ஒரு டைனிங் டேபிள் இவைகளைக் கொண்டு முழு கதையும் நகர்த்தும் சவாலான பணியை சிறப்பாக செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விநோத்ராஜ்.

இரண்டு நிமிடங்களில் ஒரு மனிதனின் வாழ்க்கை மாறவும் முடியும், பிரச்சனைக்கான தீர்வும் கிடைக்கும் என்ற எளிய கருத்தை மையமாகக் கொண்டு சிறந்த பொழுதுபோக்கு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மதன் தட்சிணாமூர்த்தி.

மேலும் செய்திகள்