< Back
விமர்சனம்
நாடோடி வாழ்க்கை  - குலு குலு சினிமா விமர்சனம்
விமர்சனம்

நாடோடி வாழ்க்கை - "குலு குலு" சினிமா விமர்சனம்

தினத்தந்தி
|
2 Aug 2022 5:29 PM IST
நடிகர்: சந்தானம், மரியம் ஜார்ஜ் நடிகை: அதுல்யா சந்த்ரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி  டைரக்ஷன்: ரத்னகுமார் இசை: சந்தோஷ் நாராயணன் ஒளிப்பதிவு : விஜய் கார்த்திக் கண்ணன்

யார் உதவி எனக் கேட்டாலும் ஓடோடிச் சென்று செய்யும் ஒருவன், ஒரு கடத்தல் டிராமாவில் சம்பந்தப்பட, அது தொடர்பாக அவன் சந்திக்கும் மனிதர்களும், அவர்களால் ஏற்படும் இன்னல்களே குலு குலு.

சந்தானம் கதாநாயகனாக நடித்த படம்.

அமேசான் காட்டுப் பகுதியில் உள்ள ஒரு நாட்டில் வசித்த பழங்குடி இனத்தை சேர்ந்தவர், சந்தானம். தன் இனத்தை இழந்து, தாய் மொழியை பேச முடியாமல் நாடோடியாக சுற்றும் அவர் தமிழ்நாட்டுக்கு வருகிறார். தமிழ்நாடு அவருக்கு பிடித்துப் போகிறது. தமிழ் மீது அவருக்கு தீராத காதல் ஏற்பட்டு, அதை பேச ஆசைப்பட்டு தமிழ்நாட்டில் தங்குகிறார்.

அனைவருக்கும் உதவ ஆசைப்பட்டு அடிக்கடி சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். பல மொழிகளில் பேசும் திறமை கொண்ட அவரை எல்லோரும் "கூகுள்" என்று அழைக்கிறார்கள். யார் உதவி கேட்டாலும் மனிதாபிமானத்துடன் ஓடோடி வந்து செய்கிறார். தங்கள் நண்பனை யாரோ கடத்தி விட்டார்கள் என்று மூன்று இளைஞர்கள் வந்து சந்தானத்திடம் உதவி கேட்கிறார்கள். அவர்களுக்கு சந்தானம் உதவ முன்வருகிறார்.

நான்கு பேரும் சேர்ந்து காணாமல் போனவரை தேட ஆரம்பிக்கிறார்கள். அந்த பயணத்தில், காணாமல் போனவரின் காதலியும் இணைகிறார். மறுபுறம் இறந்து போன தந்தையை பார்க்க வெளிநாட்டில் இருந்து வந்த தங்கையை, அவருடைய அண்ணன்கள் கொலை செய்வதற்காக தேடிவருகிறார்கள். அவர்களிடம் தங்கை சிக்கினாரா என்பதும், காணாமல் போனவரை சந்தானம் கூட்டணி கண்டுபிடித்தார்களா, இல்லையா? என்பதும் மீதி கதை.

நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்த மற்றொரு படம். அவர் நகைச்சுவையை முழுவதுமாக மறந்து, மாறுபட்ட கதாபாத்திராம் ஏற்றுள்ளார். அழுக்கு சட்டை-பேண்ட், , கலைந்த தலைமுடி, பல நாட்கள் குளிக்காத தோற்றத்தில், இப்படியும் நடிக்க முடியும் என்று நிரூபித்து இருக்கிறார். ஆரம்ப காட்சியில் இருந்து 'கிளைமக்ஸ்" காட்சி வரை படம் முழுக்க வருகிறார். சந்தானத்துக்கு பதில் மரியம் ஜார்ஜ் கோஷ்டி சிரிக்க வைக்கிறார்கள்.

கொலை செய்ய அண்ணன்களால் தேடப்படும் தங்கையாக அதுல்யா சந்த்ரா வருகிறார். பிரதீப் ராவத் வில்லனாக வருகிறார். சந்தானத்துக்கும், பிரதீப் ராவத்துக்குமான ஆடு-புலி ஆட்டம், படத்தின் விறுவிறுப்பை கூட்டுகிறது. நமிதா கிருஷ்ண்மூர்த்தி, தீனா, பிபின் ராபர்ட், ஹரிஷ், கவி. ஜெ.சுந்தரம், மவுரிஷ், யுவராஜ் என படத்தில் நிறைய புதுமுகங்கள் இருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தை தூக்கிப் பிடிக்கின்றன. ரத்னகுமார் டைரக்டு செய்திருக்கிறார். கதையும், களமும் புதுசு. டைரக்டர் ரத்னகுமார் விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார். உச்சக்கட்ட காட்சி, பிரமிப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம். டைட்டிலுக்கும், கதைக்கும் என்ன பொருத்தம் என்று புரியவில்லை.

மேலும் செய்திகள்