< Back
விமர்சனம்
சினிமா விமர்சனம் : ரன் பேபி ரன்
விமர்சனம்

சினிமா விமர்சனம் : ரன் பேபி ரன்

தினத்தந்தி
|
5 Feb 2023 8:30 AM IST
நடிகர்: ஆர்.ஜே. பாலாஜி நடிகை: ஐஸ்வர்யா ராஜேஷ்  டைரக்ஷன்: ஜெயன் கிருஷ்ணகுமார் இசை: சாம் சி.எஸ் ஒளிப்பதிவு : யுவா

வங்கியில் பணியாற்றும் ஆர்.ஜே. பாலாஜிக்கு திருமணம் நிச்சயமாகிறது. ஒரு நாள் அவருடைய காரில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒளிந்து இருப்பதை பார்த்து அதிர்கிறார்.

தனது உயிருக்கு ஆபத்து என்றும் சில மணி நேரம் வீட்டில் பாதுகாப்பாக இருக்க உதவும்படியும் ஐஸ்வர்யா ராஜேஷ் கெஞ்சுகிறார்.

ஆரம்பத்தில் தயங்கும் ஆர்.ஜே. பாலாஜி பிறகு பரிதாபப்பட்டு அடைக்கலம் கொடுக்கிறார். அப்போது எதிர்பாராத ஒரு அசம்பாவிதம் நடந்து ஆர். ஜே.பாலாஜியின் வாழ்க்கையை புரட்டி போடுகிறது. நிம்மதியை தொலைக்கிறார். பிரச்சினை அவரை துரத்துகிறது.அந்த அசம்பாவிதம் என்ன, ஐஸ்வர்யா ராஜேஷை ஆபத்து எதனால் சூழ்ந்தது போன்ற கேள்விகளுக்கு விறுவிறு திரைக்கதையில் பதில் சொல்வதுதான் படம்.

படத்துக்கு படம் சிரிக்க வைக்கும் ஆர்.ஜே.பாலாஜி இதில் சீரியஸ் வேடம் ஏற்றிருக்கிறார். அதற்கு கடுமையாக உழைத்தும் இருக்கிறார்.

சிக்கலில் மாட்டிக் கொண்டோம் என்று தெரிந்த பிறகு வெளிப்படுத்தும் பயம், சாக துணியும் விரக்தி, கோபம், வில்லன்களை தேடிப்பிடித்து பந்தாடுவது என்று புகுந்து விளையாடுகிறார்.

முக பாவனைகளில் கூடுதல் வித்தியாசம் காண்பித்து இருக்கலாம்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கொஞ்சம் கெஞ்சல், கொஞ்சம் கம்பீரம் என கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

வீல் சேரில் வரும் ராதிகா, கல்லூரி டீனாக வரும் ஜோ மல்லூரி, போலீஸ் அதிகாரி தமிழ், விவேக் பிரசன்னா, இஷா தல்வார், தமிழரசன், கபாலி விஸ்வந்த் நாகிநீடு, ஹரீஷ் பேரடி, ஸ்முருதி வெங்கட் என அனைவரும் யதார்த்த நடிப்பை கொடுத்துள்ளனர். சராசரி மனிதரான ஆர்.ஜே.பாலாஜியால் குற்ற ஆதார ஆவணங்களை எப்படி திரட்ட முடிந்தது என்பதை இன்னும் வலுவாக சொல்லி இருக்கலாம்.

கிரைம் கதைக்குரிய இசையை பிரமாதமாக கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இரவு பகல் என நகரும் கதையில் சுழன்று சுழன்று காட்சிகளுக்கு வலுசேர்த்துள்ளது யுவாவின் கேமரா.

கடைசி வரை குற்றவாளி யார், குற்றப் பின்னணி என்ன என்பதை சொல்லாமல் பரபரப்பைக் கூட்டியதோடு மருத்துவ உலகில் நடக்கும் கோல் மால்களை சமூக அக்கறையுடன் பேசி, கவனிக்க வைக்கிறார் இயக்குனர் ஜெயன் கிருஷ்ணகுமார்.

மேலும் செய்திகள்