சினிமா விமர்சனம்: கேப்டன்
|ஹாலிவுட் பாணியில் ஒரு தமிழ் படம்.
இந்திய ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள 42-வது எல்லையில், சில அபாயகரமான நிகழ்வுகள் நடக்கின்றன. அது ஒரு அடர்ந்த காட்டுப்பகுதி. அந்த காட்டுப்பகுதிக்கு செல்லும் ராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள்.
கொலையாளி யார், அவர்களை ஏவி விடுபவர்கள் யார்? என்ற ரகசியத்தை கண்டுபிடிக்க கேப்டன் ஆர்யா தலைமையில் சில ராணுவ வீரர்கள் அனுப்பப்படுகிறார்கள்.
அவர்களை 'விலங்குகள் பாதி மனிதர்கள் பாதி' தோற்றம் கொண்ட 'மெனட்டோஸ்' என்ற ராட்சச மிருகங்கள் தாக்குகின்றன. மனிதர்களை காட்டிலும் அதிக பலம் கொண்ட அந்த விலங்குகளுக்கும், ஆர்யா தலைமையிலான ராணுவ வீரர்களுக்கும் யுத்தம் நடக்கிறது. அழிக்கப்படும் 'மெனட்டோஸ்கள் மீண்டும் உயிர் பெற்று, தன்னை தாக்குபவர்களை கொல்லப் பாய்கின்றன. அவைகளுக்கு ஆர்யா குழுவினர் முடிவு கட்டினார்களா? அல்லது ராணுவ வீரர்களுக்கு 'மெனட்டோஸ்' முடிவு கட்டியதா? என்பதே 'கேப்டன்' படத்தின் கதை.
ராணுவ கேப்டனாக ஆர்யா பறந்து பறந்து துப்பாக்கியால் சுடுகிறார். மெனட்டோஸ்களிடம் கொஞ்சமாக அடிவாங்குகிறார். அவருக்கு காதலும், காதலியும் இருக்கிறார்கள். காதல் காட்சிகள் இல்லை.
காதலி ஐஸ்வர்யா லட்சுமி, களையாக இருக்கிறார். மற்றொரு நாயகி காவ்யா ஷெட்டி. பாவம், அவர் கையில் துப்பாக்கியை கொடுத்து விட்டார்கள். முன்னாள் நாயகி சிம்ரன், ராணுவ டாக்டராக வருகிறார்.
பசுமை போர்த்திய மலைப்பிரதேசத்தையும், வானம் தொடும் அடர்ந்த காடுகளையும் ஒளிப்பதிவாளர் யுவராஜ் படமாக்கியிருக்கும் விதம், பிரமிப்பு. பின்னணி இசையில், டி.இமான் மிரட்டியிருக்கிறார்.
இடைவேளை வரை மெதுவான கதையோட்டம். வசனத்தில், புரியாத தொழில்நுட்ப வார்த்தைகள் நிறைய... இரண்டாம் பாதியில், வேகமாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் சக்தி சவுந்தரராஜன். ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சரியான சவால்.