< Back
விமர்சனம்
மருத்துவக் குற்றங்கள் - பேட்டரி சினிமா விமர்சனம்
விமர்சனம்

மருத்துவக் குற்றங்கள் - "பேட்டரி" சினிமா விமர்சனம்

தினத்தந்தி
|
2 Aug 2022 11:33 AM IST
நடிகர்: செங்குட்டுவன் நடிகை: அம்மு அபிராமி  டைரக்ஷன்: மணிபாரதி இசை: சித்தார்த் விபின் ஒளிப்பதிவு : வெங்கடேஷ்

பேஸ்மேக்கரில் பொருத்தப்படும் பேட்டரிகளாலும் அதில் நடக்கும் திருட்டு மோசடிகள் என அனைத்தையும் அம்பலப்படுத்தியுள்ளார் இயக்குனர் மணி பாரதி.


சென்னையில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. போலீஸ் உதவி கமிஷனரும் புதிதாக சப் இன்ஸ்பெக்டராக பொறுப்பு ஏற்கும் செங்குட்டுவனும் விசாரித்து தடயங்களை சேகரிக்கின்றனர். அப்போது தொழில் அதிபர் ஒருவரை கொல்லப் போவதாக கொலையாளி மிரட்டுகிறான். தொழில் அதிபர் வீட்டை சுற்றி போலீசை நிறுத்துகின்றனர். அதையும் மீறி கொலை நடக்கிறது. கொலையாளி யார்? எதற்காக கொலைகள் செய்கிறான். போலீஸ் பிடியில் சிக்கினானா? என்பது மீதி கதை.

போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக வரும் செங்குட்டுவன், உயர் அதிகாரியின் அவமதிப்பை தாங்கும் பொறுமை, கொலை தடயங்களை சேகரிக்கும் நுணுக்கம், அலட்டிக்கொள்ளாத உடல்மொழி என்று ஒவ்வொரு காட்சியிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார். சஸ்பென்ஸ் அவிழும்போது அதிர வைக்கிறார். தங்கை பாசத்தை சொல்லும் செங்குட்டுவனின் உணர்வுப்பூர்வமான பிளாஷ்பேக் கதை மனதை கனக்க செய்கிறது. பார்வை இழந்தவராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் முதிர்ச்சியான நடிப்பால் மனதில் நிற்கிறார்.

அம்மு அபிராமிக்கு சாகப்போகும் இருவரை காப்பாற்றும் அழுத்தமான வேடம். அதை சிறப்பாக செய்துள்ளார். தீபக் மிடுக்கான உதவி கமிஷனராக வருகிறார். நாகேந்திர பிரசாத், அபிஷேக் வில்லன்களாக மிரட்டுகின்றனர். ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும் பிற்பகுதி காட்சிகளில் வேகம். இதய நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு வைக்கப்படும் பேஸ்மேக்கர் கருவியில் நடக்கும் மோசடியை கருவாக வைத்து அழுத்தமான திரைக்கதையில் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் மணிபாரதி. வணிக வளாகத்தில் வில்லனிடம் சிக்கும் நாயகி, கொலையாளியால் போலீஸ் இன்ஸ்பெக்டர் லிப்டுக்குள் சிக்கி அலறுவது சீட் நுனிக்கு இழுக்கும் திகில் கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம். சித்தார்த் விபின் இசையும் வெங்கடேஷ் ஒளிப்பதிவும் கதைக்கு வலுசேர்த்துள்ளன.

மேலும் செய்திகள்