< Back
விமர்சனம்
மாளிகப்புரம்: சினிமா விமர்சனம்
விமர்சனம்

மாளிகப்புரம்: சினிமா விமர்சனம்

தினத்தந்தி
|
25 Jan 2023 8:56 AM IST
நடிகர்: உன்னி முகுந்தன் நடிகை: தேவநந்தா  டைரக்ஷன்: விஷ்ணு சசி சங்கர் இசை: ரஞ்சன் ராஜா ஒளிப்பதிவு : விஷ்ணு நாராயணன்

நடுத்தர குடும்ப சிறுமி தேவநந்தாவுக்கு சபரிமலை சென்று அய்யப்பனை தரிக்க ஆசை. கடன் நெருக்கடியால் தந்தை தற்கொலை செய்த பேரிடியில் இருந்த நிலையிலும் அய்யப்பன் மீதுள்ள பக்தி சிறுமிக்கு குறையாமல் இருக்கிறது. சக பள்ளி தோழன் ஸ்ரீபத்தும் சிறுமி தேவநந்தாவும் வீட்டுக்கு தெரியாமல் சபரிமலை புறப்பட்டு செல்கிறார்கள்.

அந்தப் பயணத்தில் சிறுமிகளை கடத்தும் சம்பத்ராமின் தீய பார்வை தேவநந்தா மீது வீழ்கிறது. அப்போது ஆபத்பாந்தவனாக எங்கிருந்தோ புறப்பட்டு வந்து சிறுவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார் படத்தின் நாயகன் உன்னி முகுந்தன்.

சம்பத்ராம் அச்சுறுத்தலை மீறி சிறுமியால் அய்யப்பனை தரிசிக்க முடிந்ததா? உன்னி முகுந்தனின் பின்னணி என்ன? என்பது மீதி கதை.

சிறுமி தேவநந்தா கள்ளம் இல்லாத சிரிப்பு, அப்பா மீது வைக்கும் பாசம், அய்யப்பன் மீதான பக்தி முதிர்ச்சி என்று வயதுக்கு மீறிய உணர்வுகளை அபாரமாக வெளிப்படுத்தி மொத்த கவனத்தையும் ஈர்த்து விடுகிறார்.

உன்னி முகுந்தன் கருப்பு உடை, கட்டுமஸ்தான உடல்வாகு, நெஞ்சத்தில் துணிவு என நாயகனுக்குரிய அனைத்து அம்சங்களுடன் மிடுக்கோடு வருகிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் மனோஜ் கே.ஜெயன் அனுபவ நடிப்பால் கவர்கிறார். வில்லனாக வரும் சம்பத்ராம் ஆச்சரியப்பட வைக்கிறார். பார்வையால் பயத்தை கடத்தும் வித்தை அவருக்கு நன்றாகவே வருகிறது. சிறுவன் ஸ்ரீபத்தின் ஸ்டைலும், மேனரிசங்களும் ரசிக்க வைக்கிறது. தந்தையாக வரும் சைஜு குரூப் பரிதாபத்தை அள்ளுகிறார்.

ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் பிற்பகுதி கதையில் வேகம். சம்பத்ராமின் வில்லத்தனமான கொடூர பின்னணியையும் குழந்தைகளை தேடும் பெற்றோர்களின் தவிப்பையும் இன்னும் கொஞ்சம் காட்சிப்படுத்தி இருக்கலாம்.

ரஞ்சன் ராஜா கதைக்கு தேவையான இசையை கொடுத்துள்ளார். விஷ்ணு நாராயணன் கேமரா சபரிமலைக்கு சென்று வந்த உணர்வை ஏற்படுத்துகிறது. கதையை விட்டு விலகாமல் சிந்தனைகளின் தொகுப்பாக அழுத்தமான வசனங்களை எழுதியுள்ளார் வி.பிராபகர். ஒரு பக்தி படத்தை ஜனரஞ்சகமாகவும் கொடுக்க முடியும் என்பதை நேர்த்தியான திரைக் கதையில் சொல்லி ஜெயித்திருக்கிறார் இயக்குனர் விஷ்ணு சசி சங்கர்.

மேலும் செய்திகள்