< Back
விமர்சனம்
காதலும் தேசப்பற்றும் - சீதா ராமம்  சினிமா விமர்சனம்
விமர்சனம்

காதலும் தேசப்பற்றும் - "சீதா ராமம் " சினிமா விமர்சனம்

தினத்தந்தி
|
9 Aug 2022 4:37 PM IST
நடிகர்: துல்கர் சல்மான் நடிகை: ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர்  டைரக்ஷன்: ஹனு ராகவபுடி இசை: விஷால் சந்திரசேகர் ஒளிப்பதிவு : பிஎஸ் வினோத், ஷ்ரேயாஸ் கிருஷ்ணா

காதல் மற்றும் நாட்டுப்பற்றை ஒன்றாக கலந்து கவித்துவமாக செதுக்கி கவனம் பெறுகிறார் இயக்குனர்.

காஷ்மீரில் ராணுவ வீரராக இருக்கும் துல்கர் சல்மானுக்கு சீதா மகாலட்சுமி என்ற பெயரில் முகவரி இல்லாமல் தொடர்ந்து காதல் கடிதங்கள் வருகிறது. கடிதம் எழுதும் பெண்ணை தேடிக் கண்டு பிடிக்கிறார்.

இருவரும் காதலை தொடர்கிறார்கள். ஒரு கட்டத்தில் பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதியை கொல்லும் பணி துல்கர்சல்மானுக்கு வருகிறது. இதற்காக எல்லை தாண்டி செல்கிறார். அவர் திரும்பி வந்தாரா? என்பதும் சீதா மகாலட்சுமி யார்? என்பதும் ஜீவனுள்ள மீதி கதை.

லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பும் ராஷ்மிகா மந்தனா இந்தியாவில் இருக்கும் சீதா மகாலட்சுமிக்கு 20 வருடங்களுக்கு முன்பு ராம் எழுதிய கடிதத்தை கொண்டு சேர்க்க பயணத்தை தொடங்குவதுபோல் காட்சி விரிகிறது. அவர் தேடலுக்கு பின்னால் இருக்கும் காதல்தான் படம்.

துல்கர் சல்மான் நடிப்புக்கு தீனி போட்டுள்ள கதை. மிருணாள் தாகூரிடம் வெளிப்படுத்தும் காதல், காஷ்மீர் மோதலை தடுக்கும் விவேகம், எல்லை தாண்டி எதிரிகளை வீழ்த்தும் வீரம், சிறை சித்ரவதை என்று கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அவரது காதலியாக வரும் மிருணாள் தாகூர் வசீகரிக்கிறார். காதல் உணர்வை வெளிப்படுத்துவதிலும் ஜீவன். அவர் யார் என்ற உண்மை வெளிப்படுவதில் திருப்பம். பாகிஸ்தானை சேர்ந்த அப்ரீத்தாக வரும் ராஷ்மிகாவுக்கு அழுத்தமான வேடம். அதை சிறப்பாக செய்துள்ளார். கிளைமாக்சில் தான் யார் என்று அறிந்து கதறும்போது படம் பார்ப்பவர்களை உருக வைக்கிறார்.

ராணுவ உயர் அதிகாரிகளாக வரும் பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன், சுமந்த், சச்சின் படேகர், மற்றும் தருண் பாஸ்கர் ஆகியோர் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஆரம்ப காட்சிகளின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.

ஒரு காதல் கதையை கவித்துவமாக செதுக்கி கவனம் பெறுகிறார் இயக்குனர் ஹனு ராகவபுடி. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை கதையில் ஒன்ற வைக்கிறது, பி.எஸ்.வினோத், ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா காஷ்மீர் அழகை அள்ளுகிறது.

மேலும் செய்திகள்