குலசாமி: சினிமா விமர்சனம்
|ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்தவர் விமல். அவருக்கு ஒரு தங்கை. பெற்றோர் இல்லாத நிலையில் தங்கையை பாசமாக வளர்த்து டாக்டராக்க கனவு காண்கிறார். தங்கையும் பிளஸ்-2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெறுகிறார். மருத்துவ கல்லூரியில் சேர்க்க பணம் இன்றி தடுமாறும்போது ஊர் மக்கள் உதவி செய்து டாக்டருக்கு படிக்க வைக்கிறார்கள்.
இந்த நிலையில் பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யும் கும்பல் பிடியில் தங்கை சிக்குகிறார். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் இறந்தும் போகிறார். இதே மாதிரி இன்னும் பல பெண்களை அந்த கும்பல் சிரழிக்கிறது. அவர்களுக்கு போலீஸ் உதவியும் இருக்கிறது. அந்த கும்பலை வேட்டையாட விமல் களம் இறங்குவதும், குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா? என்பதும் மீதி கதை.
விமலுக்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள படம். அதை நன்றாக பயன்படுத்தி இருக்கிறார். காக்கி சட்டை போட்ட ஆட்டோ ஓட்டுனராக, தங்கைக்காக மனதுருகும் அண்ணனாக, நலிந்த மக்களுக்கு உதவுபவராக கேரக்டரை ரசித்து செய்திருக்கிறார். சண்டை காட்சிகளில் விமல் மாஸ் காட்டும் விதம் அருமை.
நாயகி தன்யா ஹோப்புக்கு பெரிய அளவு வாய்ப்புகள் இல்லையென்றாலும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளார். தங்கையாக வரும் கீர்த்தனா நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார். உயர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மிடுக்காக வருகிறார் ஜாங்கிட். பாலியல் குற்றவாளிகளுக்கு அவர் வித்தியாசமான முறையில் தண்டனை கொடுக்கும் கிளைமாக்ஸ் காட்சி கைதட்ட வைக்கிறது. விமலுக்கு உதவும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் முத்துப்பாண்டி அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.
போஸ் வெங்கட், கல்லூரி முதல்வராக வரும் வினோதினி ஆகியோர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். கிளைமாக்சை அவசர கோலத்தில் முடித்து இருக்க வேண்டாம்.
மகாலிங்கம் இசையில் பாடல்கள் நன்று. பின்னணி இசை பரவாயில்லை ரகம். ஒளிப்பதிவாளர் ரவிஷங்கரன் கதை மாந்தர்களையும், கதைக்களத்தையும் அழகாக படம் பிடித்திருக்கிறார். நடிகர் விஜய்சேதுபதியின் வசனங்கள் மிக யதார்த்தம்.
அண்ணன், தங்கை பாச கதையில் பாலியல் வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்து கவனிக்க வைத்துள்ளார் இயக்குனர் சரவண சக்தி.