சிறுமிகள் கடத்தல் - "மஹா" சினிமா விமர்சனம்
|கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். சிறுமிகள் கடத்தப்படுதல்தான் கதையின் கரு.
கதைப்படி, ஹன்சிகா மோத்வானி வசதியான குடும்பத்தை சேர்ந்த கிறிஸ்தவ பெண். இவருடைய காதல் கணவர், சிம்பு. இவர் ஒரு பைலட். விமான விபத்தில் இறந்து போகிறார். ஹன்சிகா தனது 8 வயது மகளுடன் நீச்சல்குளத்துடன் கூடிய ஒரு பங்களாவில் வசிக்கிறார். அவர் வசிக்கும் பகுதியில், சிறுமிகள் கடத்தப்படுகிறார்கள். அதுபற்றி ஹன்சிகா கேள்விப்பட்டும் பயப்படாமல் இருக்கிறார். இந்த நிலையில், அவருடைய மகளும் கடத்தப்படுகிறாள். இதுபற்றி ஹன்சிகா போலீசில் புகார் செய்கிறார். போலீஸ் உயர் அதிகாரி ஸ்ரீகாந்த் நேரில் வந்து விசாரணை நடத்துகிறார்.
கடத்தப்பட்ட சிறுமியை மீட்கும் முயற்சியில் ஸ்ரீகாந்த், போலீஸ் படையும் ஈடுபடுகிறது. சிறுமியை கடத்தியது யார், கடத்தல் ஆசாமியின் நோக்கம் என்ன, சிறுமி மீட்கப்பட்டாரா, இல்லையா? என்பது மீதி கதை. இதுவரை கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து, டூயட் பாடிக்கொண்டிருந்த ஹன்சிகா, 8 வயது சிறுமிக்கு தாயாக நடித்து இருக்கும் துணிச்சலை பாராட்ட வேண்டும். சிம்புவுடன் ஊடல், கூடல், மகள் மீது அதிக பாசம் உள்ள தாய்...என பலவகையான உணர்ச்சிகளையும் தனது நடிப்பில் காட்டுவதற்கு சந்தர்ப்பம். அதை ஹன்சிகா பயன்படுத்திக் கொண்டார்.
மகள் கடத்தப்பட்டு விட்டாள் என்று தெரிந்ததும் அவர் கதறி துடிக்கும் ஒரு காட்சி போதும். வாய்ப்பு கிடைத்தால், ஹன்சிகாவும் விருது பெறும் தகுதிக்கு முன்னேறி விடுவார் என்பதை கோடிட்டு காட்டியிருக்கிறது, படம். அவருடைய காதல் கணவராக 'மாலிக்' என்ற இஸ்லாமிய இளைஞராக ஆரம்ப காட்சிகளில் வந்து போகிறார், சிம்பு. சுறுசுறுப்பாக ஒரு சண்டையும் போடுகிறார்.
ஸ்ரீகாந்த், உதவி போலீஸ் கமிஷனராக வருகிறார். அலட்டிக்கொள்ளாமல் நடித்து இருக்கிறார். போலீஸ்காரராக வரும் தம்பி ராமய்யாவின் இன்னொரு முகம், எதிர்பாராதது. கருணாகரன், மஹத் ஆகியோரும் இருக்கிறார்கள். ஜிப்ரான் இசையில் 2 பாடல்கள். 'ஹிட்' ரகம். ஜே.லட்சுமன் ஒளிப்பதிவு, காட்சிகளுக்கு ஏற்ப நகர்ந்து இருக்கிறது. படத்தின் ஆரம்ப காட்சியில் விமானம் ஏறி, இறங்குவதை படமாக்கியிருக்கும் விதம், பிரமிப்பு.
யு.ஆர்.ஜமீல் டைரக்டு செய்து இருக்கிறார். சிறுமி கடத்தப்பட்ட கதைகள் இதற்கு முன்பு வந்துவிட்டதால், கதையில் ஈர்ப்பு இல்லை.திரைக்கதை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்திருந்தால், மஹா பரபரப்பாக பேசப்பட்டிருப்பாள்.