கழுவேத்தி மூர்க்கன்: சினிமா விமர்சனம்
|ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் அருள்நிதியும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த சந்தோஷ் பிரதாப்பும் சிறுவயதில் இருந்தே நட்பு பாராட்டுகின்றனர்.
சந்தோஷ் பிரதாப்பை அவமதிப்பவர்களை முதல் ஆளாக துவம்சம் செய்கிறார் அருள்நிதி. இவர்களின் நட்பு அருள்நிதியின் தந்தைக்கும் அவர் சார்ந்த சமூகத்துக்கும் உறுத்தலாக இருக்கிறது.
இந்த நிலையில் ஒரு அரசியல் கட்சியின் மாவட்டச்செயலாளராக பொறுப்பு ஏற்கும் ராஜசிம்மன் ஆட்களை வைத்து தனது தலைவரை வரவேற்க கிராமத்தில் போஸ்டர் ஒட்டுவதை அருள்நிதியும் சந்தோஷ் பிரதாப்பும் தடுத்து ஓட விடுகின்றனர்.
இதை அவமானமாக எடுக்கும் ராஜசிம்மன் அரசியல் சூழ்ச்சியால் பழிவாங்கத்துடிக்கிறார். இவரது சதி அருள்நிதியின் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது? அதற்கு அருள்நிதி கொடுக்கும் பதிலடி என்ன என்பது மீதிக்கதை..
படத்தின் ஆரம்பமே ஆட்டம், அடிதடி என ஆரம்பிக்கிறது.
அருள்நிதி நடித்திருக்கிறார் என்பதைவிட முரட்டு மீசையில் கிராமத்து இளைஞன் மூர்க்கனாகவே வாழ்ந்திருக்கிறார். நட்பு, காதல், வீரம் எனப்படம் முழுக்க அருள்நிதி காண்பிக்கும் மாஸ் அசத்தல் ரகம். சண்டையில் தெறிக்கவிடுகிறார். காதலியின் கண்ணைப்பார்க்க முடியாமல் தவிக்கும் இடம் அழகு.
நாயகியாக வரும் துஷாரா விஜயன், காதல் குறும்பு, வசியப் பார்வை, நய்யாண்டி என வசீகரிக்கிறார்.
உடல்மொழியில் அமைதியாகவும் எண்ணத்தில் போர்க்குணம் கொண்டவராகவும் வரும் சந்தோஷ் பிரதாப் குணச்சித்திர நடிப்பை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.
நெருக்கடியான சூழலிலும் சிரிக்க வைக்கும் முனிஷ்காந்த் நடிப்பில் யதார்த்தம் விளையாடுகிறது.
அருள்நிதியின் அப்பாவாக வரும் யார் கண்ணன், சந்தோஷ் பிரதாப்பின் காதலியாக வரும் சாயாதேவி, போலீஸ் கண்காணிப்பாளராக வரும் சரத்லோகித்சாவா, மாவட்டச் செயலாளராக வரும் ராஜசிம்மன், ஆய்வாளராக வரும் பத்மன் என எல்லோருமே மனதில் தங்கும்படியான நடிப்பை வழங்கியுள்ளனர்.
திரைக்கதையில் கமர்ஷியல் விஷயங்கள் கச்சிதமாக உள்ளன. நாயகன் முடிவை நியாயப்படுத்த இன்னும் சில சுவாரஸ்யங்களை சேர்த்து இருக்கலாம்.
பொட்டல் காடுகளையும் பொட்டானிக்கல் கார்டனாக காண்பித்து கவனிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்.
இமான் இசையில் கிராமிய மனம் பொங்கி வழிவதை ரசிக்க முடிகிறது. பாடல்கள் மனதில் நிற்கின்றன.
கழுமர வரலாற்றுப்பின்னணி எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. சாதிகளுக்குள் அரசியல் புகுந்தால் ஒற்றுமை எப்படி சீரழிந்து விடும் என்பதை ஆக்சன் தெறிக்க விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் கெளதமராஜ். சாதிப்பாகுபாடுகள் வேண்டாம். கல்வியே உயர்வு தரும் போன்ற நல்ல கருத்துக்களை சமூக அக்கறையோடு அழுத்தமான திரைக்கதையில் காட்சிப்படுத்திய இயக்குனரை பாராட்டலாம்.