காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்: சினிமா விமர்சனம்
|ராமநாதபுரம் இந்து-இஸ்லாமிய வாழ்வியலை இயக்குனர் முத்தையா காட்டிய விதம் புதுமை.
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் தான் ஆர்யா. இவர் ஒரு வழக்கில் சிறையில் இருக்கிறார். கிராமத்தில் வசிக்கும் சித்தி இத்னானி அப்பா, அம்மா இல்லாதவர். பெரும் சொத்துக்கு சொந்தக்காரர். அண்ணன் மகள்களை தன் மகள்கள் போல் பாசம் காட்டி வளர்க்கிறார்.
சொத்துக்களை அடையும் முயற்சியில் அண்ணனின் சம்பந்தி குடும்பம் சித்தி இத்னானியை தங்கள் வீட்டு மருமகளாக்கிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்கு சம்மதிக்காத சித்தி இத்னானி, சிறையில் இருக்கும் ஆர்யாவை சந்திக்க செல்கிறார்.
அந்த சந்திப்புக்கு பிறகு ஆர்யாவுக்கும், சித்தி இத்னானிக்கும் காதல் மலர்கிறது. இந்த காதலுக்கு சொத்தை அபரிக்க காத்து இருக்கும் உள்ளூர் தாதா சொந்தங்களால் எதிர்ப்பு வருகிறது. ஆர்யா ஏன் சிறைக்கு சென்றார், அவருக்கும் இஸ்லாமிய குடும்பத்தினருக்கும் இருக்கும் தொடர்பு என்ன? காதலர்களால் நிம்மதியாக வாழ முடிந்ததா? என்பதை மீதி கதை விளக்குகிறது.
கருப்பு கால்சட்டை, கருப்பு பனியன், தூக்கி கட்டிய கைலி என தன்னை மண்ணின் முரட்டு மைந்தனாக காண்பித்து படத்தின் ஆரம்பத்திலேயே மனதில் தங்கி விடுகிறார் ஆர்யா. நடிச்சாரா, அடிச்சாரா என்ற பட்டிமன்றம் வைக்கும் அளவுக்கு படம் முழுக்க அடிதடி பண்ணும் வேலையை ஆர்யாவுக்கு கொடுத்துள்ளனர். அதை அவரும் சிறப்பாக செய்து முடித்து ஆக்ஷன் தனக்கு பிரமாதமாக வரும் என்பதை நிரூபித்துள்ளார்.
கன்னத்தில் இருபுறமும் குழி விழ சிரிக்கும் சித்தி இத்னானியின் அழகு வசியம் செய்கிறது. வில்லன்களிடம் வீராவேசமாக பேசுவது, மயக்கும் கண்களால் ஆர்யாவை காதலில் சாய்ப்பது, அண்ணன் மகள்களிடம் பாசத்தைப் பொழிவது என தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் பொறுப்பை கச்சிதமாக செய்து மனதில் இடம் பிடிக்கிறார்.
இஸ்லாமிய பெரியவராக வரும் பிரபு அமைதியான நடிப்பால் முத்திரை பதித்துள்ளார். பாக்யராஜ், ஆடுகளம் நரேன், மதுசூதனராவ், விஜி சந்திரசேகரன், சிங்கம்புலி, விக்னேஷ்காந்த், தமிழ், ஹேமா தயாள் என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களில் உணர்வுப்பூர்வமாக நடித்து இருக்கிறார்கள்.
தேவைக்கும் அதிகமான சண்டைகளும் கதைக்குள் கதை என்று விரியும் பிளாஷ்பேக்கும் வேகத்தடை.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் கதையை வேகமாக நகர்த்த உதவியுள்ளது.
பொட்டல் காட்டிலிருந்து கதை மாந்தர்கள் வரை எல்லாவற்றையும் அழகாக படம் பிடித்துள்ளது வேல்ராஜின் கேமரா. வீரம் விளைந்த மண் சார்ந்த கதைகளை படமாக்குவதில் கைதேர்ந்தவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் இயக்குனர் முத்தையா.