கல்லறை : சினிமா விமர்சனம்
|கோடீஸ்வரரின் இளைய மகள் போதை பொருள் பழக்கத்துக்கு அடிமையாகிறாள். இதனால் உடல் நிலை பாதிக்கிறது. மகளுக்கு சிகிச்சை அளித்து மீட்க தந்தை முயற்சிக்கிறார். டாக்டரோ உடனடியாக மகளை குணப்படுத்த முடியாது என்றும் போதை காளானையே மருந்தாக கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து பிறகு அளவை குறைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.
சட்ட விரோத செயலில் ஈடுபடுபவர்கள் மூலம் போதை காளானை பெற தந்தை முயற்சிக்கிறார். ஏற்கனவே குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள மூன்று ரவுடிகள் போதை காளானுடன் வந்து பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். வீட்டு பெண்கள் மீதும் சபலப்படுகிறார்கள்.
அப்போது அவர்கள் அமானுஷ்ய சக்தியின் பிடியில் சிக்குகிறார்கள். தொடர் கொலைகளும் நடக்கின்றன. கொலைக்கான காரணம் என்ன. ஆவியாக வருவது யார்? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.
இன்ஸ்பெக்டராக வரும் ரமேஷ் கதாபாத்திரத்தோடு ஒன்றி இருக்கிறார். நாயகி தீப்தி திவான் நடிப்பிலும் அழகிலும் கவர்கிறார். தந்தையாக வரும் பாரதிமோகன் மகள் நிலைகண்டு கலங்கும் காட்சிகளில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
பெண் டாக்டராக வரும் ரதி ஜவஹர் கவனம் பெறுகிறார். ஜவஹர் ஞானராஜ், யசோதா, பிரேம பிரியா, சுரேந்தர் ஹரிஹரன் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்துள்ளனர். கான்ஸ்டபிளாக வரும் இருவரும் காமெடி ஏரியாவை கலகலப்பாக நகர்த்துகிறார்கள். திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கலாம்.
கதை நடக்கும் மலை பிரதேசத்தை பிரித்விராஜ் கேமரா கச்சிதமாக படம் பிடித்து உள்ளது. ராம்ஜி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். போதை மருந்து, ரவுடிகள், பேய் என்று அமானுஷ்ய கதையை ரசிக்கும்படி படமாக்கி உள்ளார் இயக்குனர் ஏ.பி.ஆர்.