கலகத் தலைவன்: சினிமா விமர்சனம்
|கார்ப்பரேட் நிறுவனத்தை கதற விடும் சாமானியன் கதை.
வஜ்ரா என்ற கார்ப்பரேட் நிறுவனம் குறைந்த பெட்ரோலில் அதிக மைலேஜ் தரும் கனரக வாகனத்தை சந்தைப்படுத்த விளம்பரம் செய்கிறது. இதனால் அந்த கம்பெனி உலக அளவில் கவனம் பெற்று பங்குகள் விலை எகிறுகிறது. ஆனால் வாகனம் வெளியிடும் புகை மாசு அரசு நிர்ணயித்ததை விட அதிகமாக இருக்கிறது. இந்த குறைபாட்டை யாருக்கும் தெரியாமல் மறைக்கின்றனர். ஆனாலும் ரகசியம் வெளியே கசிந்து கம்பெனியின் நற்பெயர் அடிபடுகிறது. அந்த நிறுவனத்தில் உதய நிதி ஸ்டாலின் வேலை பார்க்கிறார். ரகசியத்தை திருடியவர்களை கண்டுபிடித்து அழிக்கும் பொறுப்பை ஆரவ்விடம் ஒப்படைக்கிறார் கம்பெனி முதலாளி. இவர் விசாரணையை தொடங்கும்போது சங்கிலி தொடர்போல் நிறைய பேர் சம்பந்தப்பட்டு இருப்பதை அறிகிறார். இறுதியில் அடையாளம் தெரியாத முக்கிய உளவாளியை நெருங்குவதும் அதன்பிறகு நடக்கும் திருப்பங்களும் மீதி கதை.
உதயநிதியை மாறுபட்ட கோணத்தில் சீரியஸாக காட்டும் கதாபாத்திரம். அதில் அமைதி, காதல், கோபம், ஆக்ரோஷம், சண்டை என்று வித்தியாசமான உடல்மொழியால் புகுந்து விளையாடி இருக்கிறார். காரப்பரேட் நிறுவனத்தின் அடையாளத்தை மறைத்து ஒற்றை ஆளாக நின்று கதிகலங்க வைக்கும் சாதுரிய நகர்வுகள் மிரள வைக்கின்றன. ரெயில் நிலையதில் ஒரே அடியில் எதிரியை உதயநிதி வீழ்த்தும் சண்டை ரசிகர்களுக்கு விருந்து. திருமணத்துக்கு மாப்பிள்ளை முடிவான பிறகு நிதி அகர்வால் மனதை நேர்மையான நடத்தைகளால் உதயநிதி ஆக்கிரமிப்பதும், கைப்பை வடிவத்தை வைத்து பெண்களின் உளவியல் குணாதிசயங்களை பட்டியலிடுவதும் ரசனை.
நிதி அகர்வால் அழகான காதலியாய் வசீகரிக்கிறார். உதயநிதியிடம் கோபம் காட்டுவதும், பிறகு அவர் மேல் காதல் கொண்டு அதை சொல்ல முடியாமல் மனதில் வைத்து தவிப்பதுமாக தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார். கிராமத்தினருக்கு மருத்துவ சேவை செய்தும் கதாபாத்திரத்தில் வலுசேர்க்கிறார். வில்லனாக வரும் ஆரவ் மிரட்டி இருக்கிறார். உளவாளிகளை ஒவ்வொருவராக பிடித்து சித்ரவதை செய்யும் குரூரங்கள் அதிர வைக்கின்றன. இனி ஆரவ்வுக்கு வில்லன் வேடங்கள் வரிசை கட்டலாம்.
கலையரசன் சிறிதுநேரம் வந்தாலும் கவனம் ஈர்த்து போகிறார். பிற்பகுதி காட்சிகள் நீளத்தை குறைத்து இருந்தால் இன்னும் பேசப்பட்டு இருக்கும். கார்ப்பரேட் நிறுவனத்தின் அத்துமீறல்களையும், அதை ஆட்டம் காண வைக்கும் இளைஞனையும் மையமாக வைத்து காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி உள்ளார் இயக்குனர் மகிழ் திருமேனி. வில்லன்களை ஒற்றை அடியில் வீழ்த்தும் உதயநிதியின் சண்டைக்கு நியாயம் செய்யும் பிளாஷ்பேக் காட்சிகள் நேர்த்தி. ரெயில்நிலைய பரபரப்பு சீன்கள் நிமிர வைக்கின்றன. ஶ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம். தில்ராஜின் கேமரா ஒவ்வொரு பிரேமையும் தரமாக செதுக்கி உள்ளது.