< Back
விமர்சனம்
கப்ஜா: சினிமா விமர்சனம்
விமர்சனம்

கப்ஜா: சினிமா விமர்சனம்

தினத்தந்தி
|
20 March 2023 4:34 PM IST
நடிகர்: உபேந்திரா நடிகை: ஸ்ரேயா  டைரக்ஷன்: சந்துரு இசை: ரவி பஸ்ரூர் ஒளிப்பதிவு : ஏ.ஜே.ஷெட்டி

சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவரின் மகன் எப்படி பலரையும் எதிர்க்கக்கூடிய மாஃபியா டானாக வளர்ந்து நிற்கிறான் என்ற ஒருவரிக்கதைதான் ‘கப்ஜா’.

சுதந்திரத்திற்கு முந்தைய 1945 காலகட்டத்தில் கதை தொடங்குகிறது. உபேந்திரா சிறுவயதாக இருக்கும்போது அவரது தந்தை இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுகிறார். தந்தை மறைவுக்குபின் தாய் மற்றும் மூத்த சகோதரனுடன் அமரேஸ்வரம் என்ற ஊருக்கு வந்து குடியேறுகிறார்.

வளர்ந்ததும் விமானப்படை வீரராகிறார். அவருக்கும் அரச குடும்பத்தை சேர்ந்த ஸ்ரேயாவுக்கும் காதல் மலர்கிறது. உபேந்திரா ஊரில் மாபியாக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அரசியலுக்கு வந்து அதிகாரத்தை பிடிக்கவும் முயற்சிக்கிறார்கள்.

அவர்களை எதிர்க்கும் உபேந்திராவின் சகோதரனை கொலை செய்கின்றனர். சகோதரனை கொன்றவனை உபேந்திரா கொன்று விட்டு ஜெயிலுக்கு போகிறார்.

இதனால் நாடெங்கிலும் உள்ள மாபியா கும்பல் ஒன்று சேர்ந்து உபேந்திராவை தீர்த்துகட்ட களம் இறங்குகிறது. ஜெயலுக்குள் ரவுடிகளை இறக்குகிறார்கள். அவர்களுடன் சண்டை போட்டு வீழ்த்தி உபேந்திராவும் தாதாவாக மாறுகிறார். மாபியா கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் உபேந்திராவுக்கு துணையாக நிற்கிறார்கள்.

இவர்கள் மோதலில் வென்றது யார் என்பது கிளைமாக்ஸ்,

உபேந்திரா கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ஆரம்பத்தில் சாதுவாக வருகிறார். ஸ்ரேயாவுடன் காதல் செய்கிறார். பிற்பகுதியில் விஸ்வரூபம் எடுக்கிறார். சண்டை காட்சிகளில் பொறி கிளப்புகிறார். ஸ்ரேயா அழகால் வசீகரிக்கிறார். காதல் உணர்வுகளையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

சுதீப், சிவராஜ் குமார் சிறிது நேரம் வந்தாலும் கைதட்டல் பெறுகின்றனர்.

கே.ஜி.எப். சாயலில் இருப்பது பலகீனம். திரைக்கதையில் இன்னும் வலுசேர்த்து இருக்கலாம். மாபியாக்களை மையமாக வைத்து முழு அதிரடி சண்டை படம் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் இயக்குனர் சந்துரு வென்று இருக்கிறார். காட்சிகளில் பிரமாண்டம் தெரிகிறது. ரவி பஸ்ரூர் பின்னணி இசை, ஏ.ஜே.ஷெட்டி ஒளிப்பதிவு அதிரடி கதைக்கு உதவி இருக்கிறது.

மேலும் செய்திகள்