'ஜெயிலர்' - சினிமா விமர்சனம்
|உண்மை, நேர்மை, அகிம்சையுடன் வாழ்கிறார் 'ஜெயிலர்' ரஜினிகாந்த். தன்னைப் போலவே தன் மகனையும் (வசந்த் ரவி) நேர்மைவாதியாக வளர்க்கிறார். போலீஸ் அதிகாரியான அவரது மகன் ஒரு சிலை கடத்தல் கும்பலை விசாரிக்க செல்லும்போது மாயமாகிறார்.
ஒருகட்டத்தில் அவர் கொலை செய்யப்பட்ட தகவல் தெரியவருகிறது. மகனை இழந்து தவிக்கும் ரஜினிகாந்த் எப்படி புயலாக புறப்பட்டு எதிரிகளை துவம்சம் செய்கிறார்? மகனின் இறப்பு குறித்த பின்னணி என்ன? எதிரிகளின் சவாலில் ரஜினிகாந்த் வெற்றிபெற்றாரா? என்பது பரபரப்பான மீதி கதை.
படம் முழுக்க தனது 'டிரேட் மார்க்' ஸ்டலை வெளிப்படுத்தி ரசிகர்களை மெய்மறக்க செய்திருக்கிறார், 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த். ஆக்ஷன், காமெடி, சென்டிமெண்ட் என எல்லா திசைகளிலும் நடிப்பின் பரிமாணத்தை கொட்டியிருக்கிறார். குறிப்பாக சண்டை காட்சிகளில் அனல் தெறிக்கும் அளவு தாண்டவமாடி இருக்கிறார். 'ஹூக்கும்' பாடல் பின்னணியில் நடந்து வரும்போதெல்லாம் 'மாஸ்' காட்டுகிறார். ரஜினிகாந்தின் 'எனர்ஜி' வியக்க வைக்கிறது.
'ஒரு அளவுக்கு மேல பேச்சு இல்ல, வீச்சு தான்', 'என் சுயரூபத்தை காட்டும் நேரம் வரும்', 'ரூல்ஸ் பாலோ பண்றவங்களுக்கு மட்டும் தான் ரூல்ஸ், இல்லைனா என் ரூல்ஸ் தான்' என 'பஞ்ச்' வசனங்களுக்கும் பஞ்சமில்லை. துரோகத்தில் அவர் சிரிக்கும் காட்சி 'அடடா' ரகம்.
மகன் இறந்த துக்கத்தை, ரம்யாகிருஷ்ணன் கண்களை பார்த்து சொல்லி மவுனமாக அழும் காட்சி 'வேற லெவல்'. ரஜினிக்கு ஜோடி என முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெறுகிறார் ரம்யா கிருஷ்ணன். 'படையப்பா'வில் எடுத்த சபதத்தை இந்த படத்தின் மூலமாக தீர்த்து கொண்டுள்ளார். மகனாக வரும் வசந்த் ரவி, அழகான மருமகளாக அதிதி மேனன், பேரனாக 'யூ-டியூப்'பில் கலக்கும் ரித்விக் ஆகியோரும் கவனம் ஈர்க்கிறார்கள்.
சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சுனில் வர்மா, கிஷோர் ஆகியோருக்கு காட்சிகள் குறைவு என்றாலும், அவர்கள் கதாபாத்திரங்கள் மனதில் நிற்கும் அளவுக்கு அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள். கொடூர வில்லனாக வரும் வர்மா (விநாயகம்) கதிகலங்க வைக்கிறார். எதிரிகளை சுத்தியலால் அடித்து கொல்வது, ஆசிட்டில் மூழ்கடித்து கொல்வது என தன்னை எதிர்ப்பவர்களை பழிவாங்கும் விதத்தில் மிரட்டுகிறார்.
'காவாலா' பாடல் மூலமாக கவர்ச்சி விருந்து படைத்து வசீகரிக்கிறார், தமன்னா. பாடலுக்கு பிறகு வந்துபோகும் ஓரிரு காட்சிகள் 'என்ன அழகு?' என்று சொல்ல வைக்கிறது.
யோகி பாபு சிரிக்க வைத்துள்ளார். குறிப்பாக அவர் சொல்லும் பாரதியார் கவிதைகள் 'கலகல'. சுனில் ரெட்டி, கிங்ஸ்லி ஆகியோரும் அளவுடன் காமெடி செய்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
ரஜினி நடிப்புக்குப் பிறகு அனிருத் இசையே முக்கிய அம்சம் எனலாம். பாடல்கள் ஒரு ரகம், பின்னணி இசை இன்னொரு ரகம் என பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.
ரஜினியை சகல கோணங்களிலும் அழகாக காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன். ஆக்ஷன் காட்சிகளில் ரஜினியை மாஸாக காண்பித்து கேமரா கோணங்களில் தெறிக்க விட்டிருக்கிறார். பிளாஸ்பேக் காட்சிகளில் 30 வருடங்களுக்கு முந்தைய ரஜினிகாந்தை பார்க்க முடிகிறது. 70-80 களில் இருந்ததுபோல 'ஹேர் ஸ்டைலில்' தனது தலை முடியை கோரி அவர் நடந்து வருவது ரசிக்கச் செய்கிறது. கண்ணாடியை ஸ்டைலாக போடுவது, கிளைமேக்சில் தனக்கே உரித்தான பாணியில் அவர் ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் தியேட்டர்களில் விசில் பறக்கிறது.
பொழுதுபோக்கு பார்முலா கதையில் ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் அம்சங்களை சரி விகிதத்தில் கலந்துகொடுத்து மீண்டும் ஒரு முறை தன் திறமையை நிரூபித்து உள்ளார் இயக்குனர் நெல்சன். முன்கூட்டியே சில காட்சிகளை யூகிக்க முடிவது பலகீனமாக இருந்தாலும், படத்தின் வேகத்தில் அது காணாமல் போகிறது. கிளைமேக்ஸ் காட்சி எதிர்பாராத திருப்பம்.
'ஜெயிலர்' - அதிரடி ஆரவாரம்.