இறுகப்பற்று: சினிமா விமர்சனம்
|மூன்று குடும்பத்துக்குள் நடக்கும் உணர்வுப்பூர்வமான போராட்டம் 'இறுகப்பற்று' கதை...
மனநல ஆலோசகரான ஸ்ரத்தா ஶ்ரீநாத் விவாகரத்து செய்ய முன்வரும் தம்பதிகளுக்கு அறிவுரை வழங்கி சேர்த்து வைக்கும் பணிகளை செய்கிறார். இவரது கணவர் விக்ரம் பிரபு.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் விதார்த் தனது மனைவி அபர்ணதி குண்டாக இருப்பதாக வெறுக்கிறார். விவாகரத்தும் கேட்கிறார். இதனால் அபர்ணதி மனநல ஆலோசகரான ஸ்ரத்தா ஶ்ரீநாத்தை அணுகி தீர்வு கேட்கிறார்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட இன்னொரு தம்பதியான ஸ்ரீயும், சானியாவும் தொடர்ந்து சண்டை போட்டுக் கொள்கின்றனர். இவர்களும் ஸ்ரத்தா ஶ்ரீநாத்திடம் ஆலோசனை பெற வருகிறார்கள். விவாகரத்துக்கும் தயாராகிறார்கள்.
ஒரு கட்டத்தில் ஸ்ரத்தா ஶ்ரீநாத் நடவடிக்கைகளை விக்ரம் பிரபு வெறுக்க தொடங்குகிறார்.
கருத்து வேறுபாட்டுக்கு உள்ளாகும் இந்த மூன்று தம்பதிகளின் வாழ்க்கை என்னவாகிறது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லி உள்ளனர்.
விக்ரம் பிரபுவுக்கு இதுவரை பார்க்காத முதிர்ச்சியான கதாபாத்திரம். மனைவி சொல்லே மந்திரம் என்று தலையாட்டுபவராக மனைவியின் செயற்கையான அன்பை அறிந்து உடைந்து போகிறவராக கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார்.
மனநல ஆலோசகராக வரும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் தம்பதிகளிடம் குறைகளை கேட்கும் விதம், தீர்வு சொல்லும் பாங்கு, தன்னை விட்டு கணவர் பிரிந்து விடுவாரோ என்கிற தவிப்பு என்று அபாரமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
விதார்த்துக்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு அளித்துள்ள படம். அதை முழுமையாக பயன்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார்.
ஆசைப்பட்ட எதையும் அடைய முடியாத இயலாமையை வெளிப்படுத்தி அழும்போது பார்ப்பவர்களையும் கலங்கடித்து விடுகிறார்.
அபர்ணதி வெகுளித்தனமான நடிப்பால் மனதில் நிற்கிறார். கணவனுக்காக உடலை குறைத்து உருமாறி ஆச்சரியப்படுத்தவும் செய்கிறார்.
ஶ்ரீ, சானியா ஜோடியும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர்.
ஆரம்ப காட்சிகள் வெறும் அறிவுரைகளாக கடந்து செல்வது பலகீனமாக இருந்தாலும் அதன்பிறகு மூன்று குடும்பத்துக்குள் நடக்கும் உணர்வுப்பூர்வமான போராட்டத்துக்குள் கதை நகர்ந்து பார்வையாளர்களை கட்டிப்போடுகிறது.
விவாகரத்து பிரச்சினைகளையும், அதற்கான தீர்வையும் அழகாகவும், அழுத்தமாகவும் சொல்லி தமிழ் சினிமாவுக்கு தரமான படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் யுவராஜ் தயாளன்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் கதையோடு பயணிக்கிறது. பின்னணி இசையும் நன்று. கோகுல் பெனாய் கேமரா காட்சிகளை அழகாக செதுக்கி உள்ளது.