சினிமா விமர்சனம் - அடியே
|பள்ளியில் படிக்கும் ஜி.வி.பிரகாசுக்கு பாட்டு பாடும் சக மாணவி கவுரி கிஷன் மீது ஒரு தலையாக காதல் வருகிறது. காதலை கடைசிவரை சொல்லாமலேயே இருந்து விடுகிறார். ஒரு கட்டத்தில் பெற்றோரை இழந்து நிர்க்கதியாகிறார். நண்பர்கள் உதவுகிறார்கள்.
ஆனாலும் தனிமை வருத்த தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது பிரபல பாடகியாக மாறிய கவுரி கிஷன் தொலைக்காட்சியில் தோன்றி ஜி.வி.பிரகாஷை தேடுவதாக தெரிவிக்கிறார். இதனால் தற்கொலை முடிவை கைவிட்டு கவுரி கிஷனை பார்க்க செல்கிறார். அப்போது விபத்தில் சிக்கி டைம் டிராவல் மூலம் இணை பிரபஞ்சத்துக்கு பயணிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அங்கு அவரது மனைவியாக கவுரி கிஷன் இருக்க திகைக்கிறார்.
மீண்டும் நிஜ உலகம் வருகிறார். அங்கு அவரது நண்பனே கவுரி கிஷனை ஏமாற்றி திருமணம் செய்து கொள்ள முயற்சிப்பதை பார்க்கிறார். இந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு கவுரி கிஷனை கைப்பிடித்தாரா? என்பது மீதி கதை..
ஜி.வி.பிரகாசுக்கு நடிப்பு திறமையை முழுமையாக வெளிப்படுத்த வாய்ப்பு அளித்துள்ள படம். அதை சரியாக பயன்படுத்தி சதம் அடிக்கிறார்.
பள்ளி மாணவனாக வெளிப்படுத்தும் காதல் உணர்வுகள், பெற்றோரை இழந்து தவிப்பு, இணை உலகத்தில் காதலியை மனைவியாக பார்க்கும் தடுமாற்றம். காதலியை நண்பன் அபகரிப்பதால் பரிதவிப்பு என்று பல பரிமாணங்களில் அசாத்தியமான நடிப்பை வழங்கி ஆச்சரியப்படுத்துகிறார்.
கவுரி கிஷன் அழகில் வசீகரிப்பதோடு ஜி.வி.பிரகாசுக்கு இணையாக தேர்ந்த நடிப்பையும் வழங்கி இருக்கிறார். ஆர்.ஜே.விஜய் காமெடி ஏரியாவை கலகலப்பாக நகர்த்துகிறார்.
மதும்கேஷ், சுவேதா வேணுகோபால் கதாபாத்திரங்களில் ஒன்றி உள்ளனர். வெங்கட்பிரபு யதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார்
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் நேர்த்தி. கோகுல் பினாய் கேமரா இருவேறு உலகை வித்தியாசப்படுத்தி காட்டுவதில் உழைத்து இருக்கிறது. சில காட்சிகளை புரிந்து கொள்வதில் குழப்பம் இருப்பது பலகீனம். அதையும் மீறி நிஜ உலகத்தில் இருப்பவர்கள் இணை உலகத்தில் வேறு விதமாக இருப்பார்கள் என்ற புதுமையான கருவை மையமாக வைத்து விறுவிறுப்பும் கலகலப்பாகவும் காட்சிகளை நகர்த்தி திறமையான டைரக்டராக கவனம் பெறுகிறார் விக்னேஷ் கார்த்திக்.