< Back
விமர்சனம்
டி.எஸ்.பி: சினிமா விமர்சனம்
விமர்சனம்

டி.எஸ்.பி: சினிமா விமர்சனம்

தினத்தந்தி
|
5 Dec 2022 2:22 PM IST
நடிகர்: விஜய்சேதுபதி நடிகை: அனு கீர்த்தி  டைரக்ஷன்: பொன்ராம் இசை: இமான் ஒளிப்பதிவு : வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன்

சவால் விட்ட தாதாவை டி.எஸ்.பி-யாகி பழி தீர்க்கும் நாயகன் கதையே டி.எஸ்.பி

நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றுகிறார் விஜய்சேதுபதி. அவருக்கு அரசு வேலை வாங்கித்தர முயற்சிக்கிறார் தந்தை. அதே ஊரில் கல்லூரியில் படிக்கும் அனுகீர்த்திக்கும் விஜய் சேதுபதிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்கிறது.

இந்த நிலையில் கட்டப் பஞ்சாயத்து செய்யும் தாதா பிரபாகருக்கும் விஜய்சேதுபதிக்கும் மோதல் வருகிறது. விஜய்சேதுபதியை கொல்லப் போவதாக அவரது தந்தையிடமே நாள் குறிக்கிறார் பிரபாகர். இதனால் தலைமறைவாக இருக்கும் விஜய்சேதுபதியும் வில்லனை பழிதீர்க்க துடிக்கிறார். ஒரு கட்டத்தில் விஜய்சேதுபதி வில்லனை பழிவாங்க போலீஸ் அதிகாரியாகி ஊருக்கு வருகிறார்.

அப்போது பிரபாகரும் எம்.எல்.ஏ.வாகி உயர்ந்து நிற்கிறார். விஜய்சேதுபதி கையில் அதிகாரம் கிடைத்த பிறகு அவரால் நினைத்த மாதிரி அரசியல் செல்வாக்கோடு இருக்கும் வில்லனை பழிவாங்க முடிந்ததா, இல்லையா என்பது மீதிக் கதை.

சேதுபதி படத்துக்கு பிறகு இதில் போலீஸ் உடை அணிந்து நடித்து இருக்கிறார் விஜய்சேதுபதி. வழக்கம்போல் அலட்டிகொள்ளாத பாடிலேங்வெஜ், புத்திசாலித்தனமான பதில்கள் என தன்னுடைய அழுத்தமான 'டிரேட் மார்க்' நடிப்பை வழங்கி கதாபாத்திரத்தில் ஒன்றி இருக்கிறார். அதிரடி சண்டை காட்சிகளிலும் வேகம் காட்டி இருக்கிறார்

நாயகி அனு கீர்த்தி துறுதுறு நடிப்பால் கவர்கிறார். அவருக்கும் விஜய் சேதுபதிக்குமான காதல் காட்சிகள் ஒட்டவில்லை.

பிரபாகர் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். சிங்கம்புலி, புகழ், தீபா, ஷிவானி என சிலர் காமெடி நடிகர்களாக வந்து போகிறார்கள். ஞானசம்பந்தன், ஆதிரா போன்ற சீனியர் நடிகர்கள் அனுபவ நடிப்பை கொடுத்துள்ளனர். விஜய்சேதுபதியின் தந்தையாக வரும் இளவரசு நடிப்பில் தனித்துவம் காட்டி உள்ளார்

நட்புக்காக வந்துபோகும் விமல் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

இமான் இசையில் பாடல்கள் கவனம் பெறுகிறது. பின்னணி இசை காதுக்கு தீங்கு விளைவிக்குமளவுக்கு ஓவர் வாசிப்பு.

ஒளிப்பதிவாளர்கள் வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் இருவரும் கண்களை கஷ்டப்படுத்தாமல் வேலை செய்திருப்பது பாராட்டுக்குரியது.

போலீஸ், தாதா மோதலை இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கலாம். நகைச்சுவை, காதல், அதிரடி என்று கமர்ஷியல் படத்துக்கு தேவையான விஷயங்களை வைத்து கதையை நகர்த்தி உள்ளார் இயக்குனர் பொன்ராம்.

மேலும் செய்திகள்