< Back
விமர்சனம்
டிரைவர் ஜமுனா : சினிமா விமர்சனம்
விமர்சனம்

டிரைவர் ஜமுனா : சினிமா விமர்சனம்

தினத்தந்தி
|
30 Dec 2022 7:14 PM IST
நடிகை: ஐஸ்வர்யா ராஜேஷ்  டைரக்ஷன்: கின்ஸ்லின் இசை: ஜிப்ரான் ஆக்‌ஷன் ஒளிப்பதிவு : கோகுல் பினாய்

ஐஸ்வர்யா ராஜேஷ் 'கால் டாக்ஸி' டிரைவர். இவருடைய தந்தையும் வாடகை கார் ஓட்டுபவராக இருந்தவர். தந்தை, தாய், தம்பி என அமைதியான வாழ்க்கை நடத்திய ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்தில் சூறாவளியாக அப்பாவின் மரணம் நிகழ்கிறது. அவரை கூலிப்படையினர் கொடூரமாக வெட்டி கொல்கின்றனர். அந்த படுகொலை ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்தையே உலுக்கி எடுக்கிறது. தாய் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார். தம்பி ஊரை விட்டு செல்கிறார்.

தந்தையை கொலை செய்த கும்பலை பழி தீர்க்க ஐஸ்வர்யா ராஜேஷ் முடிவு செய்கிறார். அவரது தந்தையின் கொலைக்கு காரணம் என்ன?, கொலையாளி யார்?, கண்ணுக்கு தெரியாத எதிரியை ஐஸ்வர்யா ராஜேஷால் கண்டுபிடித்து பழிவாங்க முடிந்ததா? என்பது மீதி கதை.

சாதாரண பக்கத்து வீட்டுப் பெண் தோற்றத்திற்கு மிக அழகாக தன்னை பொருத்திக்கொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கார் ஓட்டுனர் பணியில் இருக்கும்போது எதிரிகளிடம் தன் எதிர்ப்பை உடல் மொழியால் அனாவசியமாக வெளிப்படுத்துகிறார். ஆக்ஷன் காட்சிகளில் துணிச்சலாக நடித்து ரசிகர்களை சீட் நுனிக்கு இழுத்து வருகிறார். கிளைமாக்சில் காரை கவிழ்த்து விஸ்வரூபம் எடுக்கிறார்.

அரசியல்வாதியாக வரும் ஆடுகளம் நரேன் நிறுத்தி நிதானமாக தன் ஆட்டத்தை ஆடி குரூரம் காட்டுகிறார். அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீ ரஞ்சனி, அபிஷேக்குமார், கவிதா பாரதி, இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் ஆகியோர் இயல்பான நடிப்பால் தங்கள் கதாபாத்திரத்தை மிளிரச் செய்கிறார்கள்.

பழிவாங்கலுக்குரிய விறுவிறுப்பு திரைக்கதையில் இல்லாதது ஏமாற்றம்.

இசை அமைப்பாளர் ஜிப்ரான் ஆக்ஷன் கதைக்குரிய பின்னணி இசையை கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் ஓடும் காருக்குள் நடக்கும் காட்சிகளை சுழன்று சுழன்று படமாக்கிய விதம் பிரமாதம்.

ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகந்தாலும் போகப்போக வேகம் எடுக்கிறது. எளியோரை வலியோர் வீழ்த்தும்போது, எளியோராலும் வலியோரை வீழ்த்த முடியும் என்ற ஒற்றை வரி கதையை சஸ்பென்ஸ், ஆக்ஷன் கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர் கின்ஸ்லின்.

மேலும் செய்திகள்