கடமையை செய் : சினிமா விமர்சனம்
|எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்த முற்றிலும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம்.
கதைப்படி, அவர் ஒரு சிவில் என்ஜினீயர். அவர் பணிபுரிந்த கட்டிட வேலை பாதியில் நின்று போனதால் வேலை இழக்கிறார். ஒரு பணக்காரரிடம் டிரைவர் வேலைக்கு சேருகிறார். அந்த வேலையும் பறிபோனதால், ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 'செக்யூரிட்டி' (காவலாளி) வேலைக்கு சேருகிறார். அந்த அடுக்கு மாடி குடியிருப்பு உறுதியாக கட்டப்படாமல் இடிந்து விழும் நிலையில் இருப்பதை அவர் கண்டுபிடிக்கிறார்.
அதில் வசிக்கும் அப்பாவி பொதுமக்களை காப்பாற்ற காண்டிராக்டர் வின்சென்ட் அசோகனை சந்திக்கிறார். அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழும் நிலையில் இருப்பதை வின்சென்ட் அசோகனிடம் எஸ்.ஜே.சூர்யா எடுத்து சொல்கிறார். குடியிருப்பின் அவல நிலைக்கு தன் தம்பிதான் காரணம் என்பதை உணர்ந்த வின்சென்ட் அசோகன் தம்பியை தேடிப்போய் திட்டுகிறார்.
அவருடைய தம்பி வில்லனாக மாறுகிறார். வின்சென்ட் அசோகனை கட்டிப்போடுகிறார். விபத்து போல் சதி செய்து, எஸ்..ஜே.சூர்யாவை கொல்ல முயற்சி நடக்கிறது. அதில் அவர், 'ஸ்டுமர்' என்ற நோயினால் பாதிக்கப்படுகிறார். இதனால் அவர் பேச்சு திறனை இழக்கிறார். அந்த நோயில் இருந்து அவர் மீண்டாரா, அடுக்கு மாடி குடியிருப்புவாசிகளை காப்பாற்றினாரா? என்பது மீதி கதை.
''கடமையை செய். பலனை எதிர்பாராதே'' என்ற பொன் மொழியே திரைக்கதை ஆகியிருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்ப தலைவராக நடித்து இருக்கிறார். வேலை இழந்த சோகம், என்ஜினீயருக்கு படித்துவிட்டு செக்யூரிட்டி வேலை செய்யும் இயலாமை ஆகிய உணர்ச்சிகளை மிக இயல்பாக வெளிப்படுத்துகிறார். பேச முடியாமல் தவிக்கும் காட்சிகளில், அவர் கண்கள் பேசுகின்றன. அவர் ஒரு நல்ல நடிகர் என்பதை பல காட்சிகளில் உறுதி செய்து இருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக யாஷிகா ஆனந்த் நடிப்பில் முன்னேற்றம் தெரிகிறது. பணக்கார காண்டிராக்டராக வின்சென்ட் அசோகன். இவர் வரும் காட்சிகளில், திருப்பங்கள். அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. சொந்த தம்பியே துரோகம் செய்து விட்டானே என்று அவர் உணரும்போது அவரும் அதிர்ந்து, படம் பார்ப்பவர்களையும் அதிர வைக்கிறார்.
வினோத் ரத்தினசாமியின் கேமரா காட்சிகளுக்கு ஜீவனூட்டி இருக்கிறது. அருண்ராஜின் இசையில் பாடல்கள் எடுபடவில்லை. விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் வெங்கட் ராகவன். படத்தின் முதல் பாதி சுமார். இரண்டாம் பாதியில் கருத்தும் இருக்கிறது. கதையும் இருக்கிறது.