< Back
விமர்சனம்
டி 3 : சினிமா விமர்சனம்
விமர்சனம்

டி 3 : சினிமா விமர்சனம்

தினத்தந்தி
|
19 March 2023 8:53 AM IST
நடிகர்: பிரஜின் நடிகை: வித்யா பிரதீப்  டைரக்ஷன்: பாலாஜி இசை: ஸ்ரீஜித் ஒளிப்பதிவு : மணிகண்டன்

குற்றாலம் 'டி 3' போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பொறுப்பு ஏற்கும் பிரஜின், விபத்தில் பலியான ஒரு பெண்ணின் வழக்கை விசாரிக்கிறார். இன்னொரு விபத்திலும் இளம்பெண் சாகிறார்.

விசாரணையை பிரஜின் முடுக்கும்போது ஏற்கனவே இதுபோன்று ஒரே சாயலில் நடந்துள்ள விபத்துக்களில் பல நூறுபேர் பலியாகி இருப்பதை கண்டு அதிர்கிறார்.

இன்னொரு அதிர்ச்சியாக பிரஜின் மனைவி வித்யா பிரதீப்பும் அந்த விபத்துக்கள் மாதிரியே ரோட்டில் லாரி ஏற்றி கொல்லப்படுகிறார்.

போன் அழைப்பை எடுக்கும் பெண்கள் தன்னிலை மறந்து தானாக ரோட்டுக்கு வந்து லாரி முன்னால் நின்று உயிரை விடுகிறார்கள்.

விபத்துக்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் மர்ம மனிதனை பிடிக்க பிரஜின் களம் இறங்குகிறார். இதனால் அவருக்கு அடையாளம் தெரியாதவர்களிடம் இருந்து மிரட்டலும் அச்சுறுத்தல்களும் வருகின்றன.

அவற்றை எதிர்கொண்டு முக்கிய குற்றவாளியை நெருங்குகிறார். கொலைகளுக்கான காரணம் என்ன? கொலையாளியை பிரஜினால் பிடிக்க முடிந்ததா? என்பது கிளைமாக்ஸ்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக மிடுக்காக வருகிறார் பிரஜின். கட்டுக்கோப்பான அவரது உடல் அமைப்பும் இயல்பான நடிப்பும் கதாபாத்திரத்துக்கு வலுசேர்த்துள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும் பிரஜின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. துப்பு துலக்கும் காட்சிகளில் தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார்.

வித்யா பிரதீப் சில காட்சிகளில் வந்தாலும் இல்லத்தரசியாக வசீகரிக்க வைக்கிறார். டாக்டராக வரும் ராகுல் மாதவன் ஆரம்பத்தில் அப்பாவி முகம் காட்டுகிறார். கிளைமாக்சில் அதிர வைக்கிறார்.

மணிகண்டனின் ஒளிப்பதிவு பாராட்டும்படி இருக்கிறது. ஸ்ரீஜித்தின் பின்னணி இசை கதையின் ஓட்டத்துக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. நூற்றுக்கணக்கில் நடந்த விபத்து கொலைகளை போலீஸ் எப்படி கண்டு கொள்ளாமல் இருந்தது என்பது கதையின் பலகீனம்.

மருத்துவ குற்றங்களை உள்ளடக்கிய திரில்லர் கதையை முடிச்சுக்கள் திருப்பங்களுடன் விறுவிறுப்பு குறையாமல் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் பாலாஜி. மருத்துவ உலகின் கறுப்பு பக்கங்களைச் சொன்ன விதமும் கவனிக்க வைக்கிறது.

மேலும் செய்திகள்