காலேஜ் ரோடு: சினிமா விமர்சனம்
|‘கல்வி என்பது நம் தேவை மட்டுமல்ல.. அது நம் உரிமையும்கூட…’ என்பதை கமர்சியல் கலந்து பேசியிருக்கிறது ‘காலேஜ் ரோடு’ திரைப்படம்.
கல்லூரி மாணவரான நாயகன் லிங்கேஷுக்கு சைபர் துறையில் ஆர்வம் அதிகம். வங்கிகளின் பாதுகாப்புக்கான சாப்ட்வேரை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். அதே கல்லூரியில் நாயகி மோனிகா படிக்கிறார். முதல் சந்திப்பிலேயே காதல் வசப்படுகிறார்கள்.
இதற்கிடையே நகரத்தில் பல இடங்களில் வங்கி கொள்ளை நடக்கிறது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீஸ் வலை வீசுகிறது. காவல் துறையால் குற்றவாளிகளை பிடிக்க முடிந்ததா? நாயகன் லிங்கேஷின் கண்டுபிடிப்பு காவல்துறைக்கு உதவியதா? நாயகன் நாயகி காதல் முடிவு என்ன? போன்ற பல கேள்விகளுக்கு அதிரடி திருப்பங்களோடு விடை தருகிறது மீதிக் கதை.
அமைதியான கல்லூரி மாணவர் வேடத்துக்கு லிங்கேஷ் கச்சிதம். உணர்ச்சிகரமான காட்சிகளில் தனது இயல்பான நடிப்பின் மூலம் அழுத்தம் கொடுக்கிறார். நாயகி மோனிகா குடும்ப பாங்கான தோற்றத்தில் வந்து அசத்துகிறார். நண்பராக வரும் ஆனந்த் நாக், அவருடைய காதலியாக வரும் பொம்முலட்சுமி கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ராக் கேரக்டரில் வரும் அன்சர் நன்றாகவே சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் எல்லை மீறி முகம் சுளிக்க வைக்கின்றன. குணச்சித்திர வேடங்களில் வரும் அக்சய் கமல், நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அருவி பாலா ஆகியோரின் பங்களிப்பு கவனம் பெறுகிறது.
இசையமைப்பாளர் ஆப்ரோ கதையின் தேவைக்கு ஏற்ப இசையமைத்துள்ளார்.' ஏதேதோ ஆச்சு' மெலடி பாடல் மனதில் நிற்கிறது. ஒளிப்பதிவாளர் கார்த்திக் சுப்ரமணியம் காட்சிகளை அழகாக படம் பிடித்து இருக்கிறார்.
படத்தின் சில காட்சிகள் மெதுவாக நகர்வது பலவீனம். கல்லூரி பின்னணியில் கிரைம், திரில்லர் என ஆக்ஷன் படம் எடுத்திருக்கிறார் இயக்குனர் ஜெய் அமர்சிங். கல்வி சாமானியர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதையும் சமூக அக்கறையோடு பதிவு செய்துள்ளார்.