< Back
விமர்சனம்
சினிமா விமர்சனம்: சொப்பன சுந்தரி
விமர்சனம்

சினிமா விமர்சனம்: சொப்பன சுந்தரி

தினத்தந்தி
|
15 April 2023 10:30 AM IST
நடிகை: ஐஸ்வர்யா ராஜேஷ்  டைரக்ஷன்: எஸ்.ஜி.சார்லஸ் இசை: அஜ்மல் தஹ் ஒளிப்பதிவு : பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபாலன்

ஏழ்மையான நிலையில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் நகை கடையில் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுகிறார். அவர் அனுப்பிய பரிசு கூப்பனொன்றுக்கு முதல் பரிசாக கார் கிடைக்கிறது. அந்த காரை சீதனமாக கேட்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷின் அக்காவை மணக்கப்போகும் மாப்பிள்ளை. கார் எனக்குத்தான் சொந்தம் என்று ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் போலீஸ் ஸ்டேஷன் வரை பிரச்சினையை கொண்டு செல்கிறார்.

அங்கிருக்கும் இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யாவிடம் தவறாக நடக்கிறார். காரை வைத்து அக்காவின் திருமணத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் நடத்தினாரா? போலீஸ் ஸ்டேஷனிலிருந்து காரை மீட்டாரா, தன்னிடம் தவறாக நடக்க முயன்ற போலீஸ் அதிகாரிக்கு எப்படி பாடம் புகட்டுகிறார் என்பது மீதி கதை.

ஒரு படத்தில் ஹீரோ இருந்தால் என்னவெல்லாம் செய்வாரோ அதை அனைத்தையும் ஐஸ்வர்யா ராஜேஷ் செய்கிறார். அப்பாவியாக ஆரம்பித்து அதிரடியாக மாறும் ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது. குடும்பத்தின் ஏழ்மையை கண்களால் கடத்துவதாகட்டும், ஆஸ்பத்திரியில் அப்பாவி போல் முகத்தை வைத்துகொண்டு பண்ணும் காமெடியாகட்டும், வம்பு பண்ணுபவர்களை வெளுத்துக்கட்டுவதாகட்டும் எல்லா இடங்களிலும் அசத்தியிருக்கிறார். அக்காவாக வரும் லஷ்மி பிரியா வாய் பேச முடியாவிட்டாலும் கண்களால் பேசி கவர்ந்து விடுகிறார்.

அம்மாவாக வரும் தீபா சங்கர் வெகுளித்தனமான கேரக்டரில் பிரமாதம். மிக்ஸிக்காக ஏங்குவது, மகளின் வீரத்தை எண்ணி பெருமைப்படுவது என்று எல்லா இடங்களிலும் நிறைவான நடிப்பைக் கொடுத்துள்ளார்.

அண்ணனாக வரும் கருணாகரன் வழக்கம்போல் யதார்த்த நடிப்பை மிகையில்லாமல் வழங்கியிருக்கிறார். அடாவடி கேரக்டருக்கு மைம்கோபி கச்சிதம். போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சுனில், மாப்பிள்ளையாக வரும் சாரா, உதவி இயக்குனராக வரும் சதீஷ் கிருஷ்ணன் என அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்கள்.

நகைச்சுவையை வாரி வழங்கியுள்ளார் ரெடின் கிங்ஸ்லி. போலீஸ் ஸ்டேஷனில் அவர் பண்ணும் அலப்பறைக்கு தியேட்டரில் சிரிப்பலை. இரண்டாம் பாதியில் ஏற்படும் தொய்வு, ஹீரோயின் தன்னை காப்பாற்றிக்கொள்ள என்ன மாதிரி முடிவெடிப்பார் என்று யூகிக்க முடிவது படத்தின் பலகீனம்.

அஜ்மல் தஹ்ஸின் இசையில் பாடல்களும், விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் படத்துக்கு பலம்.

ஒளிப்பதிவாளர்கள் பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் யதார்த்தமாக ஒளிப்பதிவு செய்து கதையை விறுவிறுப்பாக நகர்த்த உதவியிருக்கிறார்கள்.

எல்லா தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியான பொழுதுப்போக்கு படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ்.

மேலும் செய்திகள்