< Back
விமர்சனம்
இளமை துள்ளலுடன் திகில்  - பெஸ்டி சினிமா விமர்சனம்
விமர்சனம்

இளமை துள்ளலுடன் திகில் - "பெஸ்டி" சினிமா விமர்சனம்

தினத்தந்தி
|
10 July 2022 3:34 PM IST
நடிகர்: அசோக் குமார் நடிகை: யாஷிகா ஆனந்த்  டைரக்ஷன்: ரங்கா இசை: ஜே.வி ஒளிப்பதிவு : ஆர்.ஆனந்த்

காதலர் அசோக்குடன் ஒரு தனிமையான பங்களாவுக்கு ‘டேட்டிங்’ கிளம்புகிறார் யாஷிகா ஆனந்த். ‘டேட்டிங்’ வந்ததன் பலன் கிடைத்ததா? என்ற கேள்விகளுக்கு பதில் மீதி கதையில் இருக்கிறது.

அசோக்கும், யாசிகாவும் காதலர்கள். இருவரும் 'டேட்டிங்' போகிறார்கள். அதற்காக நடுக்காட்டுக்குள் அமைந்துள்ள ஒரு பங்களாவை தேர்வு செய்கிறார்கள். இரண்டு பேரும் காரில் சென்று கொண்டிருக்கும்போது, பிரேக் பிடிக்காமல் கார் விபத்துக்குள்ளாகிறது. மரத்தில் மோதி நிற்கும் காரை ஒரு மெக்கானிக் வந்து சரி செய்கிறார்.

காதலர்கள் மறுபடியும் பயணத்தை தொடர்கிறார்கள். குறிப்பிட்ட பங்களாவை அடைகிறார்கள். அந்த பங்களாவின் 'வாட்ச்மேன்' சத்யன் காதல் ஜோடிக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து விட்டு, சொந்த ஊருக்கு போய்விடுகிறார்.

அசோக், 'டேட்டிங்' வந்ததன் நோக்கத்தை நிறைவேற்ற துடிக்கிறார். ''இப்போது வேண்டாம்....இரவு வரட்டும்... பார்த்துக் கொள்ளலாம்'' என்று யாசிகா தள்ளிப்போடுகிறார். அப்போது இருவருக்கும் அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்படுகின்றன. அதில் இருந்து அவர்கள் தப்பினார்களா? இருவருக்கும் 'டேட்டிங்' வந்ததன் பலன் கிடைத்ததா? என்ற கேள்விகளுக்கு பதில் மீதி கதையில் இருக்கிறது.

வசதியான நாகரிக இளைஞர் கதாபாத்திரத்தை உணர்ந்து செய்து இருக்கிறார், அசோக். அவருடைய வசன உச்சரிப்பு, உடல்மொழி இரண்டிலும் இந்தக்காலத்து பணக்கார இளைஞரை பார்க்க முடிகிறது. திகில் காட்சிகளில் பதற வைக்கிறார்.

யாசிகா கவர்ச்சி நாயகியாக கிளுகிளுப்பூட்டுகிறார். படம் முழுக்க தொடை தெரிகிற மாதிரி அரைக்கால் சட்டை அணிந்து வருகிறார். ரம்பா இல்லாத குறையை யாசிகா நிரப்பி இருக்கிறார். மாறன், வாசுவிக்ரம், ஜீவா, சத்யன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோரும் இருக்கிறார்கள். படம் முழுவதும் பசுமை பிரதேசத்தில் இருந்த உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார், ஒளிப்பதிவாளர் ஆர்.ஆனந்த். பின்னணி இசையில் கொஞ்சமாக பயமுறுத்தி இருக்கிறார், இசையமைப்பாளர் ஜே.வி.

இளைஞர்களை குறிவைத்து படத்தை இயக்கியிருக்கிறார், டைரக்டர் ரங்கா. எல்லா பேய் படங்களிலும் இடம்பெறுகிற காட்சிகள்தான் இந்த படத்திலும் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் சில காட்சிகள், இளசுகளை தியேட்டருக்கு வரவழைக்கும் யுக்தியை புரிந்து கொண்ட இயக்குனர் என்று அடையாளம் காட்டுகின்றன. 'கிளைமாக்ஸ்' எதிர்பாராத திருப்பம்.

மேலும் செய்திகள்