பாபா பிளாக் ஷீப்: சினிமா விமர்சனம்
|நகரத்தில் ஆண்கள் பள்ளி, இருபாலர் பள்ளி என ஒரே இடத்தில் இரண்டு பள்ளிகளை நடத்தி வருகிறார் அதன் நிர்வாகி. அவரது மரணத்துக்கு பிறகு இரண்டு பள்ளிகளையும் ஒன்றாக இணைத்து விடுகின்றனர்.
ஆண்கள் பள்ளியை சேர்ந்த அயாஸும், இருபாலர் பள்ளியை சேர்ந்த நரேந்திர பிரசாத்தும் வகுப்பில் கடைசி பெஞ்ச் எங்களுக்குதான் என எந்நேரமும் மோதிக் கொள்கிறார்கள்.
சில போட்டிகளை நடத்தி அதில் யார் முதலிடம் பெறுகிறார்களோ அவர்களுக்குதான் கடைசி பெஞ்ச் என்று பந்தயமும் கட்டுகிறார்கள்.
இந்த நிலையில் அம்மு அபிராமியிடம் ஒரு மாணவன் எழுதிய கடிதம் கிடைக்கிறது. அந்த கடிதத்தில் பெயர் குறிப்பிடாத மாணவன் தன் பிறந்தநாளில் தற்கொலை செய்துகொள்ளப் போகும் தகவல் இருக்கிறது
கடிதத்தை படித்து பதறும் மாணவர்கள் தற்கொலையை தடுத்தார்களா? மாணவர்களிடையே இருந்த பகைமை மறைந்ததா? என்பது மீதி கதை.
அயாஸ், நரேந்திர பிரசாத் இருவரும் நாயகன் வேடத்துக்கு கச்சிதமாக இருக்கிறார்கள். மாணவர்களிடையே இருக்கும் நக்கல், குறும்பு, பகை என பருவக்கோளறால் ஏற்படும் அத்தனை உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.
அம்மு அபிராமி கிடைத்த வாய்ப்பில் முடிந்தளவுக்கு ஸ்கோர் செய்திருக்கிறார். அம்மா வேடத்தில் வரும் 'விருமாண்டி' அபிராமி விழிகளால் பேசியே கேரக்டருக்கு சிறப்பு செய்திருக்கிறார்.
அறிமுக காட்சியில் சிரிக்க வைக்கும் விக்னேஷ் காந்த் அந்த சிரிப்பை படம் முழுவதும் தக்க வைத்துள்ளார்.
பள்ளி நிர்வாகிகள் சுப்பு பஞ்சு, சுரேஷ் சக்ரவர்த்தி, உடற்பயிற்சி ஆசிரியர் போஸ் வெங்கட், பள்ளி முதல்வர் வினோதினி, சேட்டை ஷெரீப், மதுரை முத்து, பழனி, ஓ.ஏ.கே சுந்தர், பிரசன்னா, தனம் என அனைவரும் தங்கள் வேலையை குறை வைக்காமல் செய்திருக்கிறார்கள்.
மர்மமாக இறந்த மாணவியின் மரணத்துக்கான பின்னணியை சரியாக சொல்லாதது பலகீனம்.
ஒளிப்பதிவாளர் சுதர்சன் சீனிவாசன் மாணவர்களின் உலகம் வண்ணமயமானது என்பதை தன் ஒளிப்பதிவால் பதிவு செய்துள்ள விதம் அருமை. சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். பின்னணி இசையும் துல்லியம்.
பெற்றோர்கள் கடமை, கண்டிப்பு என்ற பெயரில் மாணவர்களின் மனதை புரிய தவறுவதையும் பெற்றோர்களின் பாசத்தை மாணவர்கள் உணராமல் இருப்பதையும் கலகலப்பான திரைக்கதையில் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராஜ்மோகன் ஆறுமுகம்.