< Back
விமர்சனம்
அகிலன்: சினிமா விமர்சனம்
விமர்சனம்

அகிலன்: சினிமா விமர்சனம்

தினத்தந்தி
|
11 March 2023 8:34 AM IST
நடிகர்: ஜெயம் ரவி நடிகை: பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன்  டைரக்ஷன்: கல்யாண கிருஷ்ணன் இசை: சாம்.சி.எஸ் ஒளிப்பதிவு : விவேக்

துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டர் வேலை செய்யும் தொழிலாளியான ஜெயம் ரவி கடத்தல் ஆசாமிகளின் சட்டவிரோத சரக்குகளை துறைமுகத்திலிருந்து வெளியே எடுத்து வருவதற்கு உதவுகிறார். கடத்தல் தலைவனை சந்திக்கவும் முயற்சிக்கிறார். இதன் காரணமாக துறைமுக அதிகாரிகள், எதிர் கோஷ்டியின் பகை என நான்கு புறமும் எதிர்ப்புகளை சம்பாதிக்கிறார். போதை தடுப்பு அதிகாரி ஒருவர் ஜெயம் ரவியை கிடுக்கிப்பிடிப் போட்டு பிடிக்கிறார். அவரிடம், தன் குடும்ப பிளாஷ்பேக் மற்றும் சட்டத்துக்கு புறம்பாக கிடைக்கும் பணத்தின் நோக்கங்களை விளக்குகிறார்.ஜெயம் ரவியின் குடும்ப பின்னணி, அவரது நோக்கம் என்ன என்பது மீதி கதை.

படம் முழுவதும் அசத்தலான நடிப்பை வழங்கியிருக்கிறார் ஹீரோ ஜெயம் ரவி. துறைமுகத்தை கண்ட்ரோல் எடுத்து அனைவரையும் அடக்கும் கப்பல் மெக்கானிக் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியும் இருக்கிறார். கடத்தல் ஆசாமியிடம் உங்களுக்காகதான் செஞ்சேன் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்வதாகட்டும், நாயகியின் தோள்மேல் கைவைத்து காதல் பேசுவதாகட்டும், எதிரிகளை ஓட, ஓட விரட்டுவதாகட்டும் … எல்லாமே சிறப்பு. சண்டை காட்சிகளில் பொறி கிளப்புகிறார்.போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேரக்டரில் டபுள் புரமோஷன் வாங்குமளவுக்கு பிரமாதப்படுத்தியிருக்கிறார் பிரியா பவானி சங்கர். உயரம், மெல்லிய தேகம் என காக்கி உடைக்கு பிட்டாக இருக்கிறார்.

ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் மனதில் தங்குகிறார் தான்யா ரவிச்சந்திரன்.

உள்ளூர் கடத்தல் ஆசாமியாக வரும் ஹரீஷ் பேரடி, சர்வதேச கடத்தல் ஆசாமியாக வரும் தருண் ஆரோரா, போதை தடுப்பு அதிகாரியாக வரும் சிராக் ஜானி, துறைமுக அதிகாரியாக வரும் ஹரீஷ் உத்தமன், கப்பல் மாலுமியாக வரும் மைம் கோபி என அனைவரும் தங்கள் பங்கை மிச்சம் மீதி வைக்காமல் சிறப்பாக செய்துள்ளார்கள்.

ஒளிப்பதிவு, இசை இரண்டும் அகிலனின் கம்பீர நங்கூரங்கள். நீரில் நிற்கும் கப்பல், தரையில் புழுதி பறக்கும் வாகன காட்சிகள், நடுக்கடலில் போடும் சண்டை போன்றவற்றில் சுற்றிச் சுழன்று வியக்க வைக்கிறது விவேக்கின் ஒளிப்பதிவு.

கப்பல், கடல் என பயணிக்கும் கதையில் விறுவிறுப்பையும், பதைபதைப்பையும் கொடுக்கும் விதமாக பிரமாதமாக இசையமைத்திருக்கிறார் சாம்.சி.எஸ்.

பிற்பகுதி கதையின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.

கடல் மார்க்க வர்த்தகத்தின் பின்னணியில் நடக்கும் தில்லுமுல்லுகளால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை எப்படி நசுக்கப்படுகிறது என்ற ஒற்றை வரி கதையில், கடல், கப்பல், மனிதர்களின் சுயநலம் என வஞ்சகர் உலகத்தின் மறுபக்கத்தை காண்பித்து அசத்தியிருக்கிறார் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன்.

மேலும் செய்திகள்