< Back
விமர்சனம்
ஆதார்: சினிமா விமர்சனம்
விமர்சனம்

ஆதார்: சினிமா விமர்சனம்

தினத்தந்தி
|
21 Sept 2022 9:29 AM IST
நடிகர்: கருணாஸ் நடிகை: ரித்விகா  டைரக்ஷன்: ராம்நாத் பழனிகுமார் இசை: ஸ்ரீகாந்த் தேவா ஒளிப்பதிவு : மகேஷ் முத்துசாமி

‘குற்றங்களும், போலீஸ் விசாரணைகளும்’ என்று படத்துக்கு பெயர் சூட்டியிருக்கலாம். அப்படி ஒரு போலீஸ் கதை.

கருணாஸ் ஒரு கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ரித்விகா. இவர் பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார். குழந்தையை பெற்றுக்கொடுத்து விட்டு ரித்விகா காணாமல் போகிறார்.

கருணாஸ் போலீசில் புகார் செய்கிறார். அந்த புகார் இழுத்தடிக்கப்படுகிறது. குழந்தையை கையில் வைத்துக்கொண்டு, "என் மனைவியை கண்டுபிடித்துக்கொடுங்கள்" என்று போலீசாரிடம் கருணாஸ் கெஞ்சுகிறார். ஒரு வழியாக போலீஸ் விசாரணை நடத்தி முடித்து கருணாசை அழைத்து, "உன் மனைவி காதலருடன் ஓடிப்போய் விட்டாள்" என்று கூறுகிறார்கள்.

அதை கருணாஸ் நம்ப மறுத்து, "என் மனைவி அப்படிப்பட்டவள் இல்லை" என்கிறார். அவருடைய மனைவி என்ன ஆனார்? என்பது மீதி கதையில் இருக்கிறது.

கருணாசுக்கு குணச்சித்ர வேடம். நடிப்பாலும், உடல் மொழியாலும் ஏழை கட்டிட தொழிலாளி பச்சமுத்துவாகவே அவர் மாறியிருக்கிறார். மனைவியை காணவில்லை என்று போலீசிடம் கண்கலங்கியபடி புகார் கொடுக்கும்போதும் சரி, முதல்-அமைச்சர் செல்லில் புகார் கொடுத்ததற்காக அந்த முரட்டு போலீசிடம் அடி வாங்கும்போதும் சரி, கருணாஸ் படம் பார்ப்பவர்களின் ஒட்டுமொத்த அனுதாபத்தையும் சம்பாதிக்கிறார்.

ரித்விகாவுக்கும், இனியாவுக்கும் அதிக வேலையில்லை. படத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் வந்து போகிறார்கள். கெட்ட போலீசுக்கு மத்தியில் ஒரு நல்ல போலீஸ் ஏட்டுவாக அருண்பாண்டியன். அவருடைய முடிவு, சோகம். உமா ரியாஸ்கான் உதவி போலீஸ் கமிஷனராக பயமுறுத்துகிறார்; முரட்டு போலீஸ் அதிகாரி வேடத்தில், 'பாகுபலி' பிரபாகர் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார். அந்த தாலாட்டு பாடல், சுகமான ராகம். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். ராம்நாத் பழனிகுமார் டைரக்டு செய்து இருக்கிறார். கருணாஸ் கதைக்குள் இன்னொரு கதையை செருகியிருப்பது தேவையா? "பிளாஷ்பேக்" காட்சிகளை இன்னும் தெளிவாக படமாக்கி இருக்கலாம்.

போலீஸ் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கருத்தை ஊர்ஜிதம் செய்து இருக்கிறது 'ஆதார்'.

மேலும் செய்திகள்