ஒரு பெண் பிள்ளையின் போராட்டம் 'கார்கி' சினிமா விமர்சனம்
|9 வயது சிறுமியை வன்புணர்வு செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட அப்பாவை வெளியே கொண்டுவர போராடும் ஒரு பெண் பிள்ளையின் கதை.
9 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்ட உண்மை சம்பவம் படமாகி இருக்கிறது.
அந்த சிறுமியை 5 பேர் ஒருவர் பின் ஒருவராக வன்புணர்வு செய்கிறார்கள். 5 பேரில் ஒருவர் அடுக்கு மாடி குடியிருப்பின் காவலர் பிரமானந்தம். இவர் 60 வயதை தாண்டிய முதியவர். 5 பேர்களையும் போலீஸ் கைது செய்து காவலில் வைக்கிறது.
வேலைக்குப்போன அப்பா வீடு திரும்பவில்லையே என்று பிரமானந்தத்தின் மகளும் ஆசிரியையுமான கார்கி தேட ஆரம்பிக்கிறார். அப்பாவை போலீஸ் விசாரணைக்காக அழைத்து சென்றது தெரியவருகிறது. ''என் அப்பா நிரபராதி'' என்று கார்கி போலீஸ் அதிகாரியிடம் வாதாடுகிறார். அதற்கு பலன் கிடைக்கவில்லை.
ஜெயிலில் அடைக்கப்பட்ட அப்பாவை வெளியே கொண்டுவர கார்கி வக்கீலை தேடுகிறார். அதற்கு எந்த வக்கீலும் முன்வரவில்லை. சிறுமி வன்புணர்வு வழக்கு என்பதால் குற்றவாளிக்கு ஆதரவாக யாரும் வாதாட வேண்டாம் என்று 'பார் கவுன்சில்' தடை விதிக்கிறது.
திக்குவாய் வக்கீலான இந்திரன் கலியபெருமாள், மட்டும் வாதாட முன்வருகிறார். அவருக்கு வெற்றி கிடைத்ததா, இல்லையா? பிரமானந்தம் நிரபராதியா, குற்றவாளியா? என்பதற்கான விடை, மீதி கதையில் இருக்கிறது.
கதாநாயகன், டூயட் போன்ற வழக்கமான அம்சங்கள் எதுவும் இல்லாத படம். ஒட்டுமொத்த படத்தையும் சுமப்பவர், சாய் பல்லவிதான். அப்பா மீது அபரிமிதமான பாசம் கொண்ட மகளாக படம் பார்ப்பவர்களை அவருடைய கதாபாத்திரத்துடன் ஒன்ற வைத்து விடுகிறார். போலீஸ் அதிகாரியிடம், ''எங்க அப்பா எங்கே?'' என்று கேட்பதில் ஆரம்பித்து, ஜெயிலில் அப்பாவின் முகம் பார்த்து பேச முடியாமல் ஒதுங்கி நிற்பது, பாதிக்கப்பட்ட சிறுமியை சந்தித்து பேசுவது வரை, படம் முழுக்க சாய் பல்லவி ஒரு பாசமுள்ள மகளாக நெஞ்சில் நிலைத்து நிற்கிறார்.
பாதிக்கப்பட்ட சிறுமியாக வேதா பிரேம்குமார், அனுதாபத்தை சம்பாதிக்கிறார். அவருடைய அப்பாவாக சரவணன். ''என் பொண்ணு என் முகத்தைக்கூட பார்க்க மறுக்கிறாள். வலிக்குது என்று அவள் அழும்போது என்னால் தாங்க முடியவில்லை'' என்று கதறும் காட்சியில் மொத்த தியேட்டரையும் சரவணன் கலங்க வைத்து விடுகிறார்.
இவர்களை அடுத்து மனதில் பதிபவர், திக்குவாய் வக்கீல் காளி வெங்கட். சாய் பல்லவியின் அப்பா பிரமானந்தமாக ஆர்.எஸ்.சிவாஜி, இவரா இப்படி? என்று ஆச்சரியப்பட வைக்கிறார். ஜெயப்பிரகாஷ், லிவிங்ஸ்டன், நீதிபதியாக வரும் சுதா ஆகியோரின் கதாபாத்திரங்களும் பேசப்படும்.
பெரும்பாலான காட்சிகள் கோர்ட்டுக்குள் நடப்பதால் ஒளிப்பதிவாளருக்கு அதிக வேலை இல்லை. பின்னணி இசை, கதையோட்டத்துக்கு பொருந்தி இருக்கிறது. கவுதம் ராமச்சந்திரன் இயக்கி இருக்கிறார். விறுவிறுப்பும், புத்திசாலித்தனமும் கலந்த திரைக்கதைதான் இந்த படத்தின் கதாநாயகன். ஒவ்வொரு காட்சியிலும் ஜீவன் இருக்கிறது. 'கிளைமாக்ஸ்', எதிர்பாராதது. அந்த காட்சியை இன்னும் கொஞ்சம் தெளிவாக காட்டியிருக்கலாம்.