நானியுடன் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா...!
|நானி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகி உள்ளார்.
டைரக்டராகவும் கதாநாயகனாகவும் முத்திரை பதித்த எஸ்.ஜே.சூர்யா தற்போது வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் திரைக்கு வந்த 'மார்க் ஆண்டனி' படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த வில்லன் கதாபாத்திரத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. லாரன்சுடன் ஜிகர்தண்டா இரண்டாம் பாகம் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் நானி கதாநாயகனாக நடித்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தயாராக உள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். இதிலும் அவர் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது நானிக்கு 31-வது படம்.
இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். விவேக் ஆத்ரேயா டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.