கதாநாயகனான புகழ்
|தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ், `வலிமை', `எதற்கும் துணிந்தவன்', `டி.எஸ்.பி', `யானை', `ஏஜெண்ட் கண்ணாயிரம்' உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து தற்போது `துடிக்கிறது மீசை' என்ற படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இதில் வர்ஷினி, அக்ஷதா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். முருகதாஸ், மாறன், யோகிதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தை எம்.ஜே.இளன் டைரக்டு செய்கிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ``காதல் தவறில்லை. ஆனால் காதலுக்காக வாழ்க்கையை அழித்துக் கொண்டு தங்கள் எதிர்காலத்தை வீணடிப்பது தவறு என்று சொல்கிற கதை இது. காதலில் விழுந்து தன்னை அழித்துக் கொள்ளும் இளைஞர்களைப் பற்றி படம் பேசுகிறது. மதுரையில் இருந்து சென்னைக்குப் பயணிக்கும் கதையை காதல், நகைச்சுவை கலந்து கூற இருக்கிறோம்'' என்றார்.
இந்தப் படத்தை டி.ராம் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு: அசோக்குமார், இசை: ஶ்ரீகாந்த் தேவா. `மிஸ்டர் ஜூ கீப்பர்' என்ற இன்னொரு படத்திலும் புகழ் நாயகனாக நடிக்கிறார்.