< Back
முன்னோட்டம்
ரஜினியை பார்க்க லால்சலாம் படப்பிடிப்பு தளத்தில் இரண்டாவது நாளாக திரண்ட ரசிகர்களால் பரபரப்பு !
முன்னோட்டம்

ரஜினியை பார்க்க 'லால்சலாம்' படப்பிடிப்பு தளத்தில் இரண்டாவது நாளாக திரண்ட ரசிகர்களால் பரபரப்பு !

தினத்தந்தி
|
2 Jun 2023 5:42 PM IST

புதுச்சேரியில் நடைபெறும் 'லால்சலாம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினியை பார்க்க இரண்டாவது நாளாக ரசிகர்கள் கூடியதால் பரபரப்பு !!

புதுச்சேரி,

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய திரைப்படம் 'லால் சலாம்'. விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இத்திரைப்படத்தில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணுவிஷால், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இத்திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்ற நிலையில் தற்போது புதுச்சேரியில் முக்கிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள பழைமையான ரோடியர் மில் வளாகத்தில் நேற்று காலை முதல் 'லால்சலாம்' படப்பிடிப்பு நடைபெற்றது.

நேற்று மாலை 3:00 மணி அளவில் ரோடியர் மில் வளாகத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்த்தை காண ரசிகர்கள் பலர் திரண்டனர். அவர்கள் உள்ளே நுழைவதை தடுக்க மெயின் கேட்டை இழுத்து மூடியது ரோடியர் மில் நிர்வாகம்.

இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் எப்படியாவது ரஜினியை பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் ரோடியர் மில் முன்பு காத்திருந்தனர். ஆனால் மாலை 6 மணியளவில் ரஜினிகாந்த் அங்கிருந்த ரசிகர்களை சந்திக்காமல் காரில் தான் தங்கிருக்கும் தனியார் ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார்.

இன்று காலை மீண்டும் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இன்றும் ரோடியர் மில் வாசலில் ரசிகர்கள் பலர் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதன் காரணமாக அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தொடர்ந்து ரஜினி நடிக்கும் லால்சலாம் படப்பிடிப்பு கோரிமேடு, லாஸ்பேட்டை மைதானம் உள்பட பல்வேறு இடங்களில் 10 நாள் நடைபெறும் என்று படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்