விரைவில் வெளியாகும் விருமன் பட டிரைலர்.. புதிய அப்டேட்
|முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.
கொம்பன் படத்தினை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி 'விருமன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் 'கஞ்சா பூவு கண்ணால' பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் மற்றப் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, விருமன் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா, ரசிகர்கள் முன்னிலையில் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மதுரை, ராஜா முத்தையா அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடக்கும் இந்த விழாவில், இயக்குனர் பாரதிராஜா, ஷங்கர், சூர்யா, கார்த்தி, சூரி, அதிதி ஷங்கர், இயக்குனர் முத்தையா, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உட்பட படக்குழுவினர் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவில், ஒரு பாடலுக்கு நடன இயக்குனர் சாண்டி குழுவினரும் மற்றொரு பாடலுக்கு விஜய் டிவி அமீர் - பாவனியும் நடனமாடுகின்றனர்.