50 ஸ்டண்ட் கலைஞர்களுடன் விஜய் ஆண்டனி.. பிரம்மாண்டமாக உருவாகும் வள்ளி மயில் திரைப்படம்
|இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் வள்ளி மயில். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வெண்ணிலா கபடிகுழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுசீந்திரன். இவர் தற்போது விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வரும் 'வள்ளி மயில்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரியா அப்துல்லா, சத்யராஜ், பாரதிராஜா, தம்பி ராமையா, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். வள்ளி திருமணத்தை பின்புலமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.
1980-களின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகும் "வள்ளி மயில்" படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி, சிறுமலை காட்டினுள் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட கோவில் அரங்கில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் மும்பையை சேர்ந்த 50 ஸ்டண்ட் கலைஞர்களுடன் நடிகர் விஜய் ஆண்டனி, பரியா அப்துல்லா இந்த சண்டைக்காட்சியில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.