டோவினோ தாமஸ் படப்பிடிப்பில் தாக்குதல்
|சினிமா படப்பிடிப்புத் தளத்தில் முகமூடி அணிந்த மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதில் மேக்கப்மேன் படுகாயமடைந்தார்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் டோவினோ தாமஸ். இவர் தமிழில் தனுசுடன் மாரி 2 படத்தில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேசுடன் இணைந்து நடித்த வாஷி படம் சமீபத்தில் வெளியானது. தற்போது 2493 எப்.டி. என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஓம் சாந்தி ஓஷானா, ஒரு முத்தாசி கதா, சாராஸ் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். 2493 எப்.டி. படத்தின் படப்பிடிப்பு கோட்டயம் அருகில் உள்ள பஞ்சிபாலம் என்ற பகுதியில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் படப்பிடிப்பு நடந்த இடத்துக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த மேக்கப் மேன் மிதுன் ஜித் என்பவரை கடுமையாக அடித்து உதைத்தார்கள். அவருக்கு படுகாயம் ஏற்பட்டு கீழே விழுந்தார். தாக்குதல் நடத்திய முகமூடி ஆசாமிகள் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். படப்பிடிப்பு குழுவினர் மேக்கப் மேனை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். எதற்காக தாக்குதல் நடந்தது என்று தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.