பத்து தல படத்தின் புதிய அப்டேட்
|'சில்லுனு ஒரு காதல்', ’நெடுஞ்சாலை’ படத்தை இயக்கிய ஒபலி என். கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கி வருகிறார். சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு 'பத்து தல' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வைரலானது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான மாநாடு' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபலி என். கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'பத்து தல' படத்தின் சிறப்பு போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
பத்து தல படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்ட படப்பிடிப்பு மே மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது டி.ராஜேந்தரின் உடல்நலப் பிரச்சனை காரணமாக சிம்பு அமெரிக்கா சென்றுள்ளதால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கி 45 நாள் தொடர்ந்து நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.