< Back
சினிமா துளிகள்
சோழர்களின் காலம் தமிழர்களின் பொற்காலம் - புதிய வீடியோ வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு
சினிமா துளிகள்

'சோழர்களின் காலம் தமிழர்களின் பொற்காலம்' - புதிய வீடியோ வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு

தினத்தந்தி
|
19 July 2022 10:08 PM IST

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1. இந்த திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சில தினங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாக கூறி படக்குழுவினருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த செல்வம் என்பவர் அனுப்பியுள்ள இந்த நோட்டீசில், "சோழர்களின் வம்சத்தில் நாமம் இடும் பழக்கம் இல்லாத நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் நெற்றியில் நாமம் இட்டுள்ளது போன்ற காட்சி அமைப்பு தவறானது என்றும் இயக்குனர் மணிரத்னம் வரலாற்றை மறைத்துள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

மேலும், இன்னும் எத்தனை வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது என்பது படம் பார்த்தால் தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் படத்தை வெளியிடும் முன் தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும்" என வக்கீல் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 'சோழர்களின் காலம் தமிழர்களின் பொற்காலம்' என்ற தலைப்பில் வரலாற்றாசிரியர்கள், எழுத்தாளர்கள், வல்லுநர்கள் சோழர்களின் ஆட்சி குறித்து கூறும் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்