ரஜினி படத்தில் ரித்திகா சிங்?
|சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 படத்தில் நடிகை ரித்திகா சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த ஆகஸ்டு மாதம் வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. தொடர்ந்து மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்குவர உள்ளது.
அடுத்து தனது 170-வது படத்தில் நடிக்க ரஜினி தயாராகி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த சில நாட்களில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் போலி என்கவுண்டர் சம்பந்தமான கதை என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தை சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கி பிரபலமான ஞானவேல் டைரக்டு செய்கிறார். படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க மஞ்சுவாரியர் பெயர் அடிபடுகிறது.
இந்த நிலையில் இன்னொரு நாயகியாக நடிக்க ரித்திகா சிங்கிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.