போஜ்புரி நடிகை மரணம் தொடர்பாக பாடகர் கைது
|அவரை காஜியாபாத் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் கொண்டுசெல்வதற்கான அனுமதி பெற்று வாரணாசிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
காஜியாபாத்,
பிரபல போஜ்புரி நடிகையான அகான்ஷா துபே (வயது 25), கடந்த மாதம் 26-ந்தேதி வாரணாசியில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கியநிலையில் இறந்து காணப்பட்டார்.
ஒரு படப்பிடிப்புக்காக வாரணாசிக்கு அவர் சென்றிருந்தார். நடிகை அகன்ஷாவின் சாவு தற்கொலை அல்ல, கொலை என்று அவரது வக்கீல் சஷாக் சேகர் குற்றஞ்சாட்டினார்.
அகான்ஷா மரணம் தொடர்பாக 'லுக் அவுட்' நோட்டீஸ் வெளியிட்டு சமர் சிங் என்ற பாடகரையும், மற்றொருவரையும் போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில், டெல்லியையொட்டி உள்ள உத்தரபிரதேச நகரமான காஜியாபாத்தில் மறைந்திருந்த சமர் சிங் கைது செய்யப்பட்டார்.
வாரணாசியில் இருந்து வந்த போலீசாரும், உள்ளூர் போலீசாரும் அடங்கிய கூட்டு படையினர், பாடகர் சமர் சிங்கை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவரை காஜியாபாத் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் கொண்டுசெல்வதற்கான அனுமதி பெற்று வாரணாசிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.