ஷ்ரத்தா கபூரின் கனவு படங்கள்
|பாடகி லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக ஷ்ரத்தா கபூர் கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான சாஹோ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷ்ரத்தா கபூர். இந்தியில் ஆஷிக் 2, ஹைதர், ராக் ஆன்-2, ஓகே ஜானு உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.
ஷ்ரத்தா கபூர் ரசிகர்களுடன் கலந்துரையாடி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஒரு ரசிகர் யாருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டார். இன்னொரு ரசிகர் உங்கள் அத்தையான நடிகை பத்மினி கோலாபுர் வாழ்க்கை படத்தில்தானே என்றார்.
அதற்கு பதில் அளித்து ஷ்ரத்தா கபூர் கூறும்போது, ''பத்மினி கோலாபுர் வாழ்க்கை கதையில் நடிப்பேன் என்பது சரியான பதில்தான். அது எனது விருப்பமும்கூட. எனது அத்தையான இந்தி நடிகை பத்மினி கோலாபுர் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விருப்பம் உள்ளது. அதுபோல் சாதனை படைத்த பாடகி லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவும் ஆசைப்படுகிறேன். இது என்னுடைய மிகப்பெரிய கனவு படங்கள் ஆகும்'' என்றார்.