மசாலா படங்களுக்கு மத்தியில் சீனு ராமசாமி தந்த மேன்மையான படம் - இயக்குனர் மிஸ்கின்
|இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார்.
தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. இந்த திரைப்படத்தை ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.
தர்மதுரை படத்தை தயாரித்த ஆர்.கே.சுரேஷ், மாமனிதன் படத்தின் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார். மாமனிதன் திரைப்படம் ஜூன் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் மிஷ்கின் நெகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அதில், "மிக எளிமையாக எடுக்கப்பட்ட அன்பு சித்திரம். இந்த படம் என் சிந்தனைகளை மேம்படுத்துகிறது. என் வாழ்க்கையை அர்த்தப்பட வைக்கிறது. மசாலா படங்களுக்கும் பம்மாத்து படங்களுக்கும் இடையே ஒரு மேன்மையான படத்தை தந்த சீனு ராமசாமிக்கு என் மனதின் ஆழத்தில் இருந்து நன்றிகள்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.