15 வருடத்திற்கு பிறகு செல்லத்துடன் மீண்டும் இணைந்துள்ளேன் - நடிகர் பிரகாஷ் ராஜ்
|இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
2023 பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவுள்ளது. வாரிசு திரைப்படத்தில் 'விஜய் ராஜேந்திரன்' என்ற கதாபாத்திரத்தில் அப்ளிகேஷன் டிசைனராக விஜய் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. சமீபத்தில் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரகாஷ் ராஜின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வாரிசு படத்தில் உங்கள் காதாபாத்திரம் என்ன என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ், "செல்லத்தோட வேலை பார்த்து கிட்டத்தட்ட 15 வருடம் ஆகிவிட்டது. இது ஒரு நல்ல படம். கதையை சொல்லனுமா? வேண்டாமா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், நானும் செல்லமும் திரும்ப சேர்ந்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.